ஓர்மம் கொள்.

துன்பம் நீக்கும் சுதந்திரப் பேரிகை
தொலைந்து போனது எங்கெனக் கண்டியா?
நின்று…தட்டியே கேட்டவர் நீறினார்
நிழலும் மாய்ந்தது ஏனெனக் கேட்டியா?
இன்பம் என்னும் எலும்பினை நக்கி நீ
இனியும் வாழ்வியா? நின்குரல் யாருக்கும்
இன்று கேட்கலை சுரணையற்றே விழும்
எருமை மாடெனச் சேற்றில் புரள்வியா?

கடமை செய்ய மறந்து, உளத்துளே
கறுவிக் கொண்டு கிடந்து, கனவுகள்
உடைந்து வீழ உதிர்ந்து, விழிகளில்
உதிரம் காய்ந்து வரண்டு, பயத்துடன்
தடைகள் தாண்டத் துவண்டு, வருமொரு
தடவை வாய்ப்பென் றயர்ந்து, வெளியிலோர்
அடிமை போன்று அடங்கிக் கிடந்தவா!
அசுரவேகங்கொண் டோர்நாள் எழுவியா?

விடிவு என்பது நிச்சயம் தோன்றுமாம்.
வெளிப்பெழுந்து இருளை விழுங்குமாம்.
முடிவு துன்பத்துக் கென்றோ கிடைக்குமாம்.
முயற்சி தோற்காது ஓர்நாள் ஜெயிக்குமாம்.
கிடைக்கும் வாய்ப்பினைப் பற்றி…உச்சாணிக்
கிளையிலேறிப் பார்…யாவுங்கால்க் கீழடா!
அடக்கிவைத்த அழுகைகள் ஒன்றாக
அணையுடைப்பின் எக் கைதான் தடுக்குமா?

தீயுமிழ் நிலம் மீதிலே நிற்கவும்,
தீண்டும் புயலினைச் சாய்த்து விழுத்தவும்,
மாமழை, பனி, காற்றை ஜெயித்து இம்
மண்ணிலே நிலை கொண்டு வேர் கொள்ளவும்,
பேரிடர் தர வந்தெமைச் சுற்றிடும்
பேய்கள் ஓட்டிக் கலைத்து நிமிரவும்,
‘நீ நிகரிலை’ என்றெமைத் தாழ்த்திடும்
நீதி மாற்றவும் ஓர்மங்கொள் மானுடா!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply