புத்தாண்டுப் பூ

புத்தாண்டுப் பூவொன்று புதிதாக
இவ்விரவின்
நித்திரைக்குள்…நடுச்சாமம்
கடந்திட்ட இந்நொடியில்…
பூத்தது மணம்பரப்பி!
இந்தப்பூ இனியுமொரு
ஆண்டுக்கு வாடாமல் அழகாய் மலர்ந்திருக்கும்.
மொட்டு விரிந்து மலர்தலே வழமை…
இதோ
சட்டென்று பழையபூவின் உதிர்வில் விரிந்திருக்கும்.
எட்டுத் திசைகளுக்கும் கைகாட்டி
நிற்கின்ற
இப்பூவில்.. பன்னிரெண்டு மாத எழில்இதழ்கள்!
இப்பூவின்… இதழொவொன்றும்
வெவ்வேறு நிறங்குணங்கள்!
இப்பூ சொரிந்திருக்கும் இடையறாது மகரந்தம்!
இப்பூவைச் சுற்றிவரும்
உயிர்களெனும் வண்டினங்கள்!

ஆண்டுக் கொருதடவை
புத்தாண்டுப் பூபூக்கும்
கால விருட்சம் கோடானு கோடியாண்டாய்ப்
பூத்தபடி…
இன்னுமின்னும் பூக்கும் கருவளத்தைக்
காத்தபடி…இந்தக்
ககன வெளியெங்கும்
ஊடுருவிக் கிளைபரப்பி உயிர்ததும்ப நிமிர்ந்திருக்கு!
போன நொடியில்
உதிர்ந்து சருகான
ஆண்டுப்பூ பற்றி
அதன் குறை நிறைபற்றி
நினைவுகளை மீட்டாலும்…இப்போ புதிதாக
மலர்ந்த புத்தாண்டுப் பூ
அதனில் தங்கிவாழும்
அத்தனை உயிர்களுக்கும் அமுதாய்
விளங்கவேண்டும்
என்ற வளமையான கனவுவெல்ல நேர்ந்தபடி
இன்றுபுத் துயிர்த்தபடி
காலமரம் நிற்கிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply