நேற்றிருந்தேன் அந்த நிலத்தில்
தழுவவந்த
காற்றழைந்தேன்
நெஞசம் களிகூர வாயெடத்துப்
பாட்டுப் படித்துப் பரவசித்துத்
தெம்மாங்கு
கேட்க இரசித்தேன்… கிறுகிறுத்தேன்.
புழுதிமண்ணின்
வாசம் எழுந்து வருட
வெறும்பட்டிக்
காட்டின் அழுக்கிடையே கவிந்தது உயிர்வாழ்வு!
வஞ்சகங்கள் அற்ற மனிதர்
கபடமொடு
நெஞ்சினிலே நஞ்சற்ற நிஜமாந்தர்
பிரதிபலன்
கொஞ்சமும் எதிர்பாராக் கொள்கையாளர்
உணர்ச்சியூட்டின்
வெஞ்சினமாய்ப் பாய்ந்து
வெறும் பச்சைத் தண்ணீராய்
சட்டென் றடங்கும்
சாமானியர் அவர்கள்.
தொட்டுத் தடவித் துணைதந்து
‘சாப்பிடவா
ராசா’ எனஉரிமை யோடு உருசிஉணவு
ஊட்டி மகிழ்ந்தார்…அவ்
உண்மையான அன்புக்கு
ஆட்பட்டு…
‘மனிதம் அழியவில்லை’ எனத்துணிந்தேன்.
இன்றழுதேன் இந்த இடத்தில்
நவீனமென
நன்மைகளின் உச்சம் நனவில் ஒளிந்திருக்க
நாகரீகம் என்ற நடத்தைகளில்
உலகுக்கே
நாம்முதல்வர் என்ற நடப்பில்
எவரையுமே
அற்பமெனப் பார்த்து ஆணவப் பதில்தந்து
கற்றோரை மதியாது
காசைமட்டும் தான் இரசித்து
விற்பனை இலாப வியூகமொடு
சுயநலத்தைப்
பற்ற எதுஞ்செய்து பல்லிழித்து
எக்கணமும்
நிற்கும் அவரிடத்தில்
நேர்மையாயென் தேவை தீர்க்கச்
சென்று அலைக்கழிந்து
சினந்து பொறுமைகாத்து
பொறுமை கலைந்து புறுபுறுத்துத் தர்க்கித்து
பொருளற்ற நான்..அவரின்
புறக்கணிப்புக் காட்பட்டு
வெறுமையோ டின்று வீடுமீண்டேன்!
‘மனிதமின்னும்
திருந்த இடமிருக்கு’
இயற்கையிடஞ் சொல்கின்றேன்.