வாரணங்கள் புகுந்த வயல்

பெரிய மிகப்பெரிய யானைகள் பசியாறும்
வயலாச்சு எங்கள் வயல்
இந்த வயலிடையே
வசிக்கும் எலிகள்நாம்…
இந்த வயலைநம்பி
உயிர்வளர்த்துப் பாம்போடு போராடி
நொந்துபோன
எலிகள்நாம்
எம்பக்கம் நியாயம் இருந்தாலும்,
வயலெங்கள் பரம்பரையின் வழிவழியே வந்ததெனத்
திகழ்ந்தாலும்
யானைகளின் காலடி இடறலிலே
அகப்பட்டெம் வளைகள்
அடிக்கடி சிதைபட்டு
எதுஞ்செய்ய ஏலா வாளிகளாய்…இருக்கின்றோம்!
யானைக்குப் பாம்புகள்
பகையான போதினிலும்
‘யானைகளின் துதிக்கைபோல்த் தான்நாமும்’
எனஇன்று
பாம்புகள் பகர்ந்து
யானைகளின் கால்சுற்றி
விளையாட..நாமோ வில்லங்கப் படுகின்றோம்.
எங்கள் இருப்புபற்றிப் பாம்புக்கே கவலையில்லை,
எங்கள் இருப்புபற்றி
யானைக்கா வருங்கவலை?
யானைகள் தமது
பசிக்குணவு கிடைக்குமட்டும்
நாம்திரிந்த வயல்களிற்தான் தங்கும்
அதுவரைக்கும்
நாமிருக்கவா முடியும்?
காலடிக்குள் நசிபட்டே
நாம்அழியக் கூடும்!
நாங்கள் இந்த யானைகள்முன்
‘நாமும்நும் வால்போல’ எனவுரைக்கவா ஏலும்?
நியாயம் அநியாயம் தர்மம்
இவைதாண்டிச்
சூழுமிவ் ஒழுங்குக்குள்
யாரும் கணக்கெடுக்கா…
அப்பாவிகள் எமது விருப்பங்கள் என்னாகும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply