சந்தேகத் துளிசிந்தும் இரா

அசைவற்று ஆழ்ந்து உறங்கும் மனிதனைப்போல்
உறைந்து கிடக்கிறது இருட்டு
சரிந்துவிழும்
குவளைநீர் போலப் பரவும் குளிர்…,நிஷ்டை
முனிவரின் புன்னகையாய்
முகையவிழும் மௌனம்…,எத்
தூண்டல் உணர்வுக்கும் துலங்காச் சிலைகளென
நிற்கும் மரங்கள்
நிசப்த இருட்புதருள்
ஒளிபாய்ச்ச மின்னும் பூனைகளின் கண்களாய்
தொலைவில் துடித்துக்
கிடந்துளன விண்மீன்கள்.
நிலபாவாடை போல நிலத்தில்
படும் நிலவின்
ஒளிஅசையா மலைகளென
வீழும் பலநிழல்கள்,
விண்கல்லாய் எதிரே விழுந்தடங்கும் நாயூளை,
இடைக்கிடை சுழன்று வருங்காற்றாய்க்
காதுகளில்
வட்டம் அடிக்கும் நுளம்பினிசை,
என்று..இச்
சூழல்தன் பாட்டில் இருளிற் தொலைகிறது!
நாளையொரு மாற்றம்…
புதிய விடிவுவரும்
வேளைஇப் போது துயின்றுழலும் மானுடரால்
தோன்றிடுமோ என்ற
சந்தேகத் துளிஎந்தன்
கண்ணீராய்
எண்ணற்ற கஷ்டப்பட் டெழமுயலும்
இந்த நிலம்மீது
இவ்விரவில் விழுகிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply