அவர்கள் கதைப்பதற்கு அருகினிலே யாருமில்லை!
சுவர்களுடன் கதைக்கிறார்கள்,
சிலநேரம் காற்றோடும்
சிலநேரம் வானேடும் சிலநேரம் தம்மைப்போல்
அனாதையாய் அலைகின்ற
பேரறியாப் பறவையொடும்
வெளியே திரியத் தடைபோட்டு வைத்துள்ள
முட்கம்பி வேலியொடும்…
மூர்க்கம் தணித்து
தங்களது ஆற்றாமை தனைநொந்து
மண்டியிட்டுத்
தரையில் அமர்ந்து
மண்ணோடும் கதைக்கிறார்கள்!
அவர்கள் கதைக்க அருகில் எவருமில்லை!
சிலநேரம் உற்றார் சிதறுண்டு
வேறுஒரு
‘வலயத்தில்’ இருந்திடலாம்.
விண்ணிலும் உறைந்திடலாம்.
கிளைகிளையாய் செழித்துக் கிடந்தவர்கள்
இன்றிங்கே
தனித்துத்தம் நிழலோடும்
தமக்குக் கிடைத்திருக்கும்
தறப்பாள்,பிளாஸ்டிக்பாய்
தண்ணீர்க்குடம் வாளி
வகைவகையாய் அடையாள அட்டை
குடும்பக் காட்
இவற்றோடு…
பொழுதுபோக்காய்க்
கதைத்துக்கொண் டிருக்கிறார்கள்!