கடலாக மாறிக் கிடக்கிறது கோவிலடி!
அலையலையாய் வந்து
அடிக்கிறது சனவெள்ளம்!
ஆழும் அரசர்முதல் அடிமட்ட ஏழைவரை
அங்க வஸ்திரம் அகற்றிப்
பணிகின்றார்!
அந்நியம் மறந்து
அருகில்வந்து புன்னகைத்துச்
சிறுவர்கள் பெண்டிர் முதியோர்..
எனக்குவியும்
நெரிசலில் கசங்கிடுதெம் நீழல்!
கரங்களிலே
அருச்சனைத் தட்டேந்தி,
பெயர் இலக்கினம் சொல்லி,
தேங்காயில் கற்பூரத் தீபமேற்றி,
ஏதேதோ
வேண்டுதலில் எல்லோரும்
வீழ்ந்து எழுகின்றார்.
என்னென்ன வேண்டுதல்கள்
இவர்மனதிற் பூத்திருக்கும்?
எங்களது எண்ணற்ற வேண்டுதல் இவ்
வீதியெங்கும்
அனாதைகளாய் இன்றும்
அலைந்து திரிகையிலே…
இவர்களது நேர்த்திகட்கெப் பலன்கிட்டும்?
வளமைபோல்
மோனமே பதிலாய்ப்
பரம்பொருளின் முகம்மலரும்!
வெற்றிக் களிப்பு பிரயாணக் களைப்பகற்ற
‘சப்புமல் குமரயாவின் சம்பந்தம்’
என்னவென்ற
தேடலுடன்… வண்டிகள்
திரும்பிப் பயணமாகும்!
கடலாக மாறிக் கிடக்குதுஎம் கோவிலடி!!
அலையலையாய் வந்து
அகல்கிறது சனவெள்ளம்!!