துயரத்தை எனக்குத் துணையாய்
இருத்திவிட்டென்
நிம்மதியைக் கொண்டு
நீஎங்கே சென்றுவிட்டாய்?
துயரஞ் சுமந்து
துவள்கிறது இதயம் என்
துயரத்தால் மேனி எங்கும் இரணம் ஐயோ
மனதினிலே ஆறாமல்
சிதல் கூட்டும் புண் நித்தம்
துயரத்தின் வேர்கள்
துளைத்து ஊடுருவுவதால்…
அயர்ந்து உறங்கையிலும்
எழுப்பும் கலக்கம் ஆம்
கொடுமைகளை மட்டும் குவிக்கும் கனா
அந்தக்
கொடுமைகளை நேர்கண்டு
கோபப் படும் நனவு!
நெளிவு சுளிவறிந்து,
நேர்மை அறம் துறந்து,
நிலைமைக்கு ஏற்ப நெகிழ்ந்தயர்ந்து,
நிலமாந்தர்
‘பிழைக்கத் தெரியாத பேயன்’
எனஇழிக்க
எப்படியும் வாழ்ந்திடலாம் என்ற
வழி மறந்து
இப்படித்தான் வாழ்ந்திடுவேன்…
என்று நடக்கையிலே
துயரம் துணைக்குவந்து துவைக்குதுதான்…
அதற்காய் என்
இயல்புகளை விட்டுக் கொடுத்து
எவரெவர்க்கும்
அடிமையென வாழ்ந்து
அடங்கிக் கிடக்கேன்யான்!