நனவாகாக் கனாக்கள்

நனவாக முடியாக் கனவுகளைக் கண்டுகண்டு
அணுகும் புதிய மகிழ்வு
எனஇருந்தோம்.
கனவு கனவாய் மனத்திரையில் ஓடிற்று.
கனவு மனதுக்கு நிம்மதியைக் காட்டிற்று.
கனவு பலதடவை
புத்துயிர்ப்பும் ஊட்டிற்று.
கனவுநம் காலைப் புதுத்திசையில் ஓட்டிற்று.
கனவு கனவாயே கணமும் தொடர்வதனால்…
கனவு நனவாகக்
காலம் கடப்பதனால்…
நனவோ துயருள்தான்
ஊறிப் புழுத்திடுது.
ஆனாலும் கனவு நனவாகும் என்றுள்ளோம்!
ஏன்கனவு நனவாக முடியாது
என்பதனை
நாமறியோம்
கனவினிலே காண்பவை நனவினிலே
நாளையோ,
நாளை மறுநாளோ நடக்குமென்று
நம்பிக்கைக் கோலூன்றி
கனவுகளில் நாம்களித்தோம்!
நனவாகும் என்ற கனவெல்லாம்…கனவாயே
கலையத் தொடங்கிடுது என்றாலும்
மனதிலோரு
நம்பிக்கை யோடு
நனவுக்காய்க் காத்துள்ளோம்!
இன்று நனவாக முடியாக் கனவெல்லாம்
எங்கோ மறைந்துபோக
நனவுகளிற் காலூன்றக்
கூட முடியாமல் குப்புறக் கவிழ்ந்தெழுறோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply