விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்!
நேற்றுவரைச் சோள விதைகளென
நிறையவே
பாவம் பழியையெல்லாம்
பரபரப்பு ஏதுமின்றி
காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய்.
அவற்றுக்கு
அப்பாவி களினுதிரம் அள்ளி இறைத்துவிட்டாய்.
நீவிதைத்த தெல்லாம்
நிருமூலம் ஆனதென்றும்,
எவையும் வருநாளில் முளைக்க முடியாமல்
மூடிப் புதைந்ததென்றும்,
முடிந்தது துயரமென்றும்,
பாடிப் பறந்துபோனாய்.
போன மரத்தடியில்…
நீபுதைத்து முளைத்தவற்றின்
நினைவுகள் வளர்ந்துனையே
வளைத்து இறுக்கியும்
மரியாதை முளைமுறித்தும்
எழுந்துமே துள்ளினவாம்!
விழுந்தெழுந்து நீமீண்டாய்.
நேற்று விதைத்ததையே நீஇன்றறுத் தெடுத்தாய்!
நேற்று விதைத்தவைகள்…
நியாயத்தின் விதைகளாகும்.
நேற்று விதைத்தவைகள்
அநியாய விதைகளெனின்
அவையுன்னை வரவேற்று
வாழ்த்தி மகிழ்ந்திருக்கும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply