நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.

நெருப்பை அணைக்கிறீரா?
நெருப்பை வளர்க்கிறீரா?
நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான்.
அதைமுற்றாய் நீவிர்
அணைக்கவும் விரும்பவில்லை!
அதைமுற்றாய் நீங்கள்
வளர்க்கவும் நினைக்கவில்லை!
உங்கள் நலத்திற்கு ஏற்ப
ஒருவிதமாய்
இங்கே தணலைக் கையாள விரும்புகிறீர்.
நெருப்பு அறியாது…
தான்பிறரின் கைகளுக்குள்
தங்கியுள்ள சோகநிலை!
எவரினது கையுமின்றி
நெருப்பு சுயம்பாக எரிந்திடாது என்பதனை
உணர்கின்றேன் யானிவ் உலகினிலே!
நெருப்பினது
ஆற்றலை உள்ளம் அறிந்திருந்தும்
அதையுமொரு
நாய்க்குட்டி போல
நடத்துகிற வலியோர்கள்,
அவர்களது அரசியல் வரலாறு,
தந்திரங்கள்
பெரியதெனும் உண்மையினை
அடியேன் உணர்ந்துகொண்டேன்.!
எந்தளவு எரியவேண்டும்
எப்போது எவ்வாறு
எதையெதை நெருப்பு எரிக்கவேண்டும்…
எதையெதைத்தான்
எரிக்காமல் தணிந்து இருக்கவேண்டும்…
என்பவற்றைத்
தீர்மானஞ் செய்யும் திசைமுகத்தோர்
இலாவகமாய்
தங்கள் நலத்திற்கு ஏற்ப
நினைத்தபடி
நெருப்பினைக் கூட ஆட்டுகிறார்…
ஊமையானேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply