ஏழைகள் சிந்தும் கண்ணீர்
எரிமலைக் குளம்பே ஆகும்.
பாய்ந்தது பரவி…ஓர்நாள்
பாறையாய் வதைத்தோர் மீது
போய்ச்சேர்ந்து உறையும் அன்னார்
பொருள் செல்வம் சமாதியாக்கும்.
வாடியோர் மனக்குமுறல்
வரலாற்றைப் புரட்டிப் போடும்.
ஆயிரம் உயிர்விதைத்து
அவயவம் தாரைவார்த்து
வேதனைக் காயம்பட்டு
சொத்துக்கள் தொலைத்திழிந்து
காதலும் பிரிந்து…ஆண்ட
கலைகளும் புதைந்து…மண்ணில்
பீடைகள் மலிந்ததற்கும்
பலன்ஒருநாளிற் தோன்றும்.
விதைத்ததன் பலன்முளைக்கும்.
இலாபங்கள் சுயநலங்கள்
எதையுமே பாராது இங்கே
எருவான உயிர்தளைக்கும்.
சதிகள்செய்யாது சேர்த்த
திருதொலைந்தாலும் மீளும்.
அதர்மங்கள் வென்றும்…வீழும்!
தர்மமோ வீழ்ந்தும்…வெல்லும்.
இன்றுள்ள மேடு…நாளை
பள்ளமாய் மாறும் பள்ளம்
இன்றெனில் நாளை மேடாய்
ஆகிடும் பழிபாவத்திற்கு
என்றைக்கும் பலன்கிடைக்கும்.
என்றென்றும் நியாயம் நீதி
வென்றெழும் வேதனைக்கு
விடிவுநிச் சயமாய்த் தோன்றும்.