உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா!
நண்பனாய் என்னை
நீஏற்கத் தயாராசொல்?
நட்புக்கு ‘நான்பெரியோன்’
என்றநிலை தேவையில்லை.
நட்புக்கு அரசியலும் பின்புலமும் தேவையில்லை.
நட்புக்கு ‘உன்னைவிட
நானென்ன தெரிந்துள்ளேன்’
என்றமனம் தேவையில்லை.
இதயம் மிகஇளகி
உண்மையான அன்பை…இடரில் உதவுகிற
மென்மையான அன்பை…
விட்டுக் கொடுக்கின்ற
தன்மையுள்ள பண்பைத் தருகின்றேன்.
விசுவாசம்
கொண்டுன்னை நம்பிக்
குனிந்து வரவேற்று
நின்றேன்
எனது நிழலைக் குடையாயும்
தந்திடத் தயாரென்றேன்!
எப்படிநீ அதைப்பார்த்தாய்?
என்அன்பின் ஆழத்தை எப்படிநீ எடைபோட்டாய்?
வளமையான..
அற்பத் தனமான..
உள்வெறுத்தும்
அளவளாவிச் சிரிக்கும்
போலிநட்பென்றா கணித்தாய்?
சுயநலத்தை,இலாபத்தைத் தாண்டி
நிஜநட்பைத்
தரத்தயாராய் நின்றஎனைத் தள்ளிவைத்து
தினந்தோறும்
இலாபமீட்டும் நட்புகளின்
தோள்மேலே கைபோட்டு
நடக்கின்றாய்
நான்ஏங்கிப் பார்த்துள்ளேன்…நகர்கின்றாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply