நானும் மழையும்

அடுப்படிப் பூனைபோல் ஆனந்த சயனத்தில்
கிடந்தேன் சுருண்டு
தொட்டு எனைக்கிள்ளி
எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு
நடுநிசியில்
வந்து பொழிந்தமழை!
என்மனதைக் கரைத்தபடி
என்னை இரசிகனாக்கிக் கொட்டி முழக்கிற்று.
என்ன மொழியினிலோ
கோஷமிட்டுக் கூவிற்று!
வானோடோ.. மண்ணோடோ…
எதையோ பலதடவை
தணிந்தும் குரலை உயர்த்தியும் பேசிற்று!
அந்த இரவின் சந்துபொந்தை
எல்லாமும்
சங்கிராந்தி ஆட்டிற்று!
சகலமும் மெய்மறந்து
மழையோடு சங்கமித்து முழுகியதை
நான்பார்த்தேன்.
மழைவிழுது வானத்தைத்
தாங்கிக்கொண் டிருப்பதனை
மின்னல் படம்பிடித்துக் கழுவி எனக்கருளிற்று.
வானமுதை
உண்ட.,இலை தளிர்மினுங்கி ஒளிர்ந்திருக்க
குளிரென்னும் மாலையினைக்
கொண்டுவந்து சூட்டி…மழை
கௌரவப் படுத்தியெனைக் கொஞ்சிற்று.
நானொருவன்
தான் தன்னை இந்த நடுநிசியில் இரசிக்கின்றேன்
என்று பாராட்டி வாழ்த்திற்று.
அதனோடு
இரண்டறக் கலந்து
இருந்த ஒருகணத்தில்
எவ்வாறு என்னை எழுப்பிற்றோ
அதேபோல
என்னைநான் அறியாமல்
உறங்கவைத்தும் போயிற்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply