வதைபுரிபவர் வாழ்வதும் ஏனடா?
வதைகள் செய்பவர் வெல்வதெவ்வாறடா?
வதைகள் என்பவை ஆயுதம் ஏந்தியே
வாட்டி அறுத்துக் கிழித்தலென்றில்லைகாண்!
வதைகள் என்பவை வார்த்தையால் நேரலாம்.
வதைகள் என்பவை பார்வையால் தோன்றலாம்.
வதைகள் என்பவை தாழ்வு உயர்வினைச்
சாடை மாடையாய்க் காட்டலால் ஆகலாம்.
வதைகள் எவ்வகையாயினும்…செய்பவர்
வதைக்கு என்னதான் கற்பிதஞ் செய்யினும்
வதைப்பவர் எத்திறத்தினர் ஆயினும்
வதைப்பவர் எத் தரத்தினர் ஆயினும்
வதைக்க வந்தோர் வதைபடத் தக்கதாய்
மாற்றம் கொண்டர வேண்டுமே… அன்பினால்!
வதைத்து ஓர் உயிரை வாட்டும் அதிகாரம்
யார்க்கும் இல்லை என்றுரைக்கோணும் பண்பினால்!
வதைகளுக்கு எதிரியாய் நிற்கவும்
வதைப்பவர்களை நிறுத்தித் திருத்தவும்
வதைகள் பட்டோரை மீட்டு எடுக்கவும்
வதைகள் பட்டோரின் வளமையை மாற்ற நாம்
சிதையில் ஏறத் துணியவும்… வதைபட்டோர்
சிறுமை போக்கவும் குரலை உயர்த்துவோம்!
விதைகள் அன்பினாற் போடுவோம்.. அஹிம்சையின்
விஸ்வ ரூபத்துள் வதைகளை வீழ்த்துவோம்.