ஒரு நொடியே போதும் வரலாறு மாறிப்போம்

அடுத்த ஒரு நொடியில் ஆருயிர் பிரிந்திடலாம்,
அடுத்த கணத்துளெல்லாம்
தலை கீழாய் மாறிடலாம்,
என உணராப்பேதையர்கள்
‘எல்லாமும் சாதிப்போம்
விரைவிலெனச்’ சபதமிட்டு வீராப்பு பேசி நிற்க
மரணம்.. இதனை
மௌனமாகப் பார்த்திருக்கும்!
மரணம் இதைப்பார்த்து
மௌனியாகப் புன்னகைக்கும்!
மரணம் எமைஎப்போ அணுகும்
எனும்மர்மம்
புரியாப் புதிராக உள்ளவரை
‘யாமெதையும்
நடத்தி முடிப்போமே’ என்று அறை கூவி என்ன
நடந்து முடியும்?
நேற்று இருந்தமகன்
இலையாம் இன்றென்னும் பெருமைமிக்க
இப்புவியில்…
நிலையற்ற எதுவும் எக்கணமும் நிர்மூலம்
ஆகவல்ல காலத்தின்
அட்சரம் பிசகாத
இயக்கத்தில்…..,
எங்கோ எழுதிவைத்த மாதிரியாய்
அயலின் செயலும்
அணுவின் அசைவுதானும்
இயங்கியற் கொள்கையில்
தொடர்ந்து உயிர்திடையில்
ஒரு நொடியே போதும்…..
வரலாறே மாறிப்போம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply