கண்ணீரின் காரணம்

நண்பா நினது இருவிழிப் படகுகளும்
கண்ணீரில் ஆடிக்
கிடந்தன நெடுநேரம்!
இடைக்கிடை இமையின்
அணையுடைத்துத் துளிகசிந்து
பெருக்கெடுத்தந்நதிகள்
பிரயாணஞ் செய்து இதழ்த்
தீரத்தில் கலக்க…
உப்புக்கசிந்திருக்கும்
வேதனையோ டிதழைச் சுழித்தாய்!
துளிகள்பல
கண்ணீர்த் துளிகளென வீழாமல்
மிகக்கனத்த
பாதஇரசத் துளிகள் போல் மினுங்கிச்
சிதறினவே!
கண்ணீரின் காரணத்தை காணவில்லை நான் நினது
கண்ணீரின் பின்னுள்ள
கதையறிய வில்லையான்
கண்ணீர் இரசமாய்க் கனக்க
நடந்தது தான்
என்னவென ஏதும்
புரிந்து கொள்ள வில்லைகாண்
ஆனாலும் உனக்கு ஆறுதலாய் ஒன்றுரைப்பேன்!
ஆனாலும் உனக்கு ஆதரவாய் நின்றுரைப்பேன்!
இன்றில்லாப்போதும்
என்றோ ஓர் நாளேனும்
உன்பாதஇரசக் கண்ணீர்
தண்ணீராய் மாறவைப்பேன்!
உன் கண்ணீர்க் காட்டாற்றை
முற்றாய் தடுப்பதற்கு
பிட்டுக்கு மண்சுமந் தெனினும்நான் துணைதருவேன்!
உன்கண்ணீர் காயவைப்பேன்
உன் கனவை நனவாக்க
என் கனவை அடைவுவைத்து எனினும்
முயல்வேன்நின்
கண்ணீரில் கரைந்து போனேன்!
நீயும் நின் கனவுகளும்
‘அனாதைகளே அல்ல’ என்றுன்
அகத்துக்கு துணை தருவேன்!

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply