பொய்மை மயக்கம்

விண்மீனா? கோளா?விளங்காமல் பார்த்திருந்தேன்!
மின்னிவிண் மீன் போன்றும்
மின்னாமற் கோள் போன்றும்
என்னையே ஏய்த்து இருக்கிறதவ் ஒளிப்புள்ளி!
எட்ட இருந்ததனால்
எதுஎதுஎன்றுறுதி செய்ய
மட்டும் முடியவில்லை!
காலமோர்நாள் மாறிவர
கிட்ட அது நெருங்க உறுதிசெய்தேன் இதை
அதனின்
ஒற்றைத் தனிமை
அதை நினைக்கத் தூண்டிற்று!
காலாதி காலமாய்நான் காண்கின்ற போதெல்லாம்
ஏதோ ஒரு தனிமை
இழையோடும் ஒரு சோகம்
யாரும் துணைக்கில்லை என்றஒரு அனாதைநிலை
சூழ அது இருப்பதுபோல் தோன்றிடுது.
சிலவேளை
நீளும் நடுநிசி தாண்டி
நிலாவரா இரவில்
அதனினது விம்மலை அதனினது கண்ணீரை
காற்று எனக்குமுன்
காவி வருவதாயும்
ஒரு பிரமை கூடிடுது!
ஏதோ ஓர் மாற்றஏலா
ஏக்கம் புனைந்து போரில் இணைபிரிந்து
வாடுமொரு விதவைபோல்
அதன் சோகம் ததும்பிடுது!
தனித்திருந்து இன்றும்தான் தரிசித்தேன்
மின்னிமின்னி
மறைவதால் ஒற்றை விண்மீன்தான்
அது தெளிந்தேன்.
அருகில் தெரிவதனால் அதன்விசும்பல்
காற்றினிலே
கலப்பதுவாய் ஒருபிரமை…கவலைகொண்டேன்!
அருந்ததிபோல்
விண்ணில் அதுவுமோர்
பெண்ணாய்த்தான் இருக்கவேண்டும்
என்றதன் தனிமைக்கு
என்தனிமைத் துணைதந்தேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply