சிற்றிறகு விரிக்கத் துடித்திடும்
சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல்
பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின்
பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும்
சுற்றியே துணை அற்ற வெருட்சியும்
துயரும் தோன்றும் முகத்தில் …. இரைதேடி
சற்றுத் தொலைவுக்கு ஏகிய தாயினை
தடவும் விழி எனைக் கண்டு நடுங்குது!
மெல்லக் குஞ்சை எடுத்தேன் திமிறிஎன்
மீது கொத்திற்றுப் பரம்பரை ஞாபகம்
சொல்லிவைத்தாய்! துடித்தும் துவண்டது!
ஈரலிப்பான தோலிலென் கைச்சூடு
மெல்ல ஏற வெதுவெதுப் பருமையை
இரசித்தும்… பயத்தோடு கைவிட்டகன்றது!
எல்லையற்ற உயிர்ப்பின் துளியை… என்
இதயம் தேர்ந்தது இயற்கைக்கு ஈடேது?
முட்டைக்குள்ளே உயிர்கள் முளைப்பதும்
மூலவேர் மண்ணைத் தோண்டி நகர்வதும்
எட்டிடாப் பெருங்ககன வெளியிலும்
ஏதோ ஓர் உயிர் இன்புற்றிருப்பதும்
திட்டமிட்டு வளர்க்காத போதும்… என்
திசையில் ஆயிரம் ஜீவன் செழிப்பதும்
அட்டகாசமாம் இந்த உயிர்ப்புக்கு
அழிவு ஏது… நாம் யாவரும் துச்சமாம்!