வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை.
மானுடர்க்கு மட்டுமில்லை…
ஓரறிவில் இருந்து
ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும்
கூர்ந்து பார்த்தால்
வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை!
கல்லாய்ச் சமைந்தமரம் கைகால் அசைத்தகல
ஏலாச்சமாதியாய்
இருக்கும் இடத்திருந்து
நீர் எங்கு உள்ளதென வேர்தேடப்படும்பாடு
யாரறியக்கூடும்
மண்ணில் அதனினிடர்?
ஒருநேர உணவுக்கும் உயிரைக் கையில் பிடித்தே
திரிகிறது நுளம்பு!
இரத்தமன்றி வேறேதும்
உண்ண முடியாது பசியைத் தணிப்பதற்குள்
தன்னையும் அர்ப்பணிக்கத்
தயாராய்த்தான் இருக்குதது!
கண்முன் இணையிருந்தும்
கலவிசெய்ய நேரந்தான்
வந்தடையாப் போது வாழாதிருந்து நேரம்
வந்தால் இணைவிரட்டி
வாயில் வீணீரூற்றி
அலைகின்ற நாயலைச்சல்
நினைத்தாரும் பார்த்தீரா?
வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை!
போராடிப் போராடி
“தன்வாழ்வை காக்க வேணும்”
என்றவொரு உள்ளுணர்வு இயக்க
உயிர்களெல்லாம்
உண்டு உறங்கி இடர்செய்து
சாகுமட்டும்
சவால்களுக்குள் தானே தளைத்துளன!
இதை உணர் வா!
சாவரைக்கும் வாழ்வின் சவாலுக்கு
முகம்கொடடா!