காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்?
வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்?
நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்!
நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்!

ஒவ்வோர் வாழ்வும் மற்றோர் போல ஒத்துப்போவதில்லை
ஒருவனைப்போல் இன்னொருவன் வாழ்க்கை அமைவதில்லை
எவ்வாறடா போச்சு என்று… திரும்பிப்பார்போர் இல்லை!
எந்த நேரம் எது நடக்கும் யாரும் தேர்ந்ததில்லை!

யார் எழுதும் திரைக்கதைக்கு வசனம் பேசுகின்றோம்?
யார் இழுத்து ஆட்டுகிறான் நாங்கள் பொம்மையானோம்?
யார் இயக்க என்னவேடம் போட்டு நடிக்கின்றோம்?
யார் முடித்து வைக்க வீழ்ந்து மாயமாகிப் போறோம்?

நேற்று இந்த நேரம் கூடிக் கதைத்திருந்த ராசன்
நீறிப்போனான் இன்று யார் நினைத்திருந்தோம்? காலன்,
காற்றசைதல் போல்உயிர் எடுத்தகன்று போனான்.
காலக்கவிஞன் சரமகவிகள் யார்க்கு எப்ப சொல்வான்?

கனவு போன்று… உயிரைச்சுற்றும் கனவுபோல வாழ்வும்
கனவு போல சாவும் சூழ….கடமை செய்ய வேணும்!
நனவில் சட்டம் நியாயம்பேசி கிடைப்பதென்ன லாபம்?
நடுவில் தர்மம் காத்து அற்பவாழ்வை வெல்லல்… ஞானம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply