வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி
வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட,
நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே
நடக்க இன்னொரு காற்துணை தேடிட,
வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும்
வேலைக்காகாமல் முதுமைத் தளர்வுடன்…
வாழும் முதியவர்… எங்களின் செல்வங்கள்
மதித்தால் போதுமே வாழ்வர் நூற்றாண்டுகள்.
முதுமை என்பது அனுபவப் பொக்கிஷம்
முதுமை தந்ததே உணர்வின் நிதானமும்
முதுமை என்பது அறிவு மிகுமிடம்
முதுமை உண்மையைத் தேறும் ஒரு வரம்
முதுமை என்பது ஞான வழித்தடம்
முதுமை முற்றிய அன்பின் உதாரணம்
முதுமை என்பதெம் நேற்றைய வாழ்க்கையின்
முதிர்ச்சி சொல்ல…. உலவிடும் சாட்சியம்.
முதியவர்களைச் சுமையாய் நினையாமல்,
முதியவர் மனம் நோக நடவாமல்,
முதியோர்…. இல்லத்தின் தெய்வம் என்றெண்ணாமல்
‘முதியோர் இல்லங்கள்’ நித்தம் திறக்கிறோம்!
முதியவர்களின் அனுபவம்…இளையோரின்
முயற்சியோடு கைகோர்த்து நடக்கையில்
புதுமை விளைந்தது வீடு வந்தே சேரும்.
புதுமொழி இதைக் கற்பீர் – இனி நிதம்.