எப்போதும் பொலிவுகுன்றாமுகமும் அன்பை
எக்கணமும் வீசும் தெய்வீகக் கண்ணும்
எப்பொழுதும் புன்னகைக்கும் இதழும்,நெஞ்சில்
என்றும் ஊனமே…அற்றஉரமும் கற்ற
விற்பனமும் கர்ணனைப்போல் உதவுங் கையும்
பிழைதட்டிக்கேட்கும் ஆன்மபலமும் வற்றாச்
சொற்பெருக்குஆற்றவல்லவரமும் எந்தச்
சூழலையும் வெற்றிகொள்ளும் அறிவும் பண்பும்
எவர் துயரும் பகிர்கின்றகுணமும் இன்றும்
இளமைமாறாச் சித்தத்தின் அழகும். ஆழ்ந்த
தவவாழ்வில் ஒழுகியுற்றஅறமும்,தோய்ந்து
தமிழ்,சைவத்தில் திளைக்கும் கனவும் “ஆன்றோர்
அவை”அடங்கத் தலைமைதாங்கும் உயர்வும்,பூவாய்
ஆங்கிலத்தில் மாலைகோர்க்கும் திறமும்,பூண்டு
“சிவராமலிங்கம்” என்றபெயரில் வாழும்
தேவரைஎன் சிற்றறிவாஅளக்கக் கூடும்?
பிரதிகைப் பலன் எதிர்பாராஅன்புருவாய்
பிணித்து அக இருள் விரட்டும் குருவாய் சேயின்
சிறுமைகண்டும் அதைப் பொறுக்கும் அருளாய் சொந்த
இயலாமைமறந்துதவும் திருவாய்…கொள்கைப்
பிரிவுகளை இணைத்துவைக்கும் உறவாய்…கற்ற
பேரறிஞர் மதிக்கின்றபெரியோய் பிஞ்சுச்
சிறுகுழந்தைபோல் வெள்ளைஉளத்தோய்! வாழும்
செயல் வீரா! எமக்கு“எல்லாம்”புரக்கும் நீர்.. தாய்!
கற்பனைக்குஎட்டாதகவலைப்பட்டுக்
களைக்கையிலும் கண்மலர்ந்தூர்க் கரைச்சல் தீர்ப்பீர்!
நற்றுணையாம் “மூன்றுசில்லுச் சைக்கிள்”ஏறி
நாலுவீட்டுச் சரிபிழைக்குத் தருமஞ் செய்வீர்!
விற்பனர்கள் கல்வியாளர் பலரைஅன்றே
விளைவித்தும் பெயர் புகழைவிரும்பீர்! யார்க்கும்
உற்றதுணை, இனியன் என்றுவாழ்வதாலே
ஒருஏணிபோல் நடந்தீர்…பெருமைகொண்டீர்.
‘யாழ் இந்து’என்றகலைக்கோவில் காத்த
‘துவாரபாலகரில்’நீர் ஒருவர் இங்கு
வாயாரக் கம்பன் புகழ்பாடிவென்ற
‘மாணவரை’வழிப்படுத்திநிற்கும் அப்பர்
காலத்தால் முற்பிறவித் தொடர்பால்..நாமும்
“கால் பிடிக்கஎமைவாழ்த்தும் இனியபாட்டர்
சீலத்தால் பிறர்க்கெடுத்துக்காட்டாய்…. இன்றும்
திகழ்ந்தெளிமையாய் வாழும் ஞானப் பூட்டர்!
புங்குடுதீவுமண்ணின் புதுமைஆனீர்
புகுந்தநிலம் மேன்மையுறப் பரிபாலிக்கின்றீர்
மங்களஞ்சேர் மனத்தாலேநிறைவுங் கண்டீர்.
வயதாச்சோ? இளைஞனெனஉலவுகின்றீர்.
உங்களினால் உயர்வுபெறும் சிறியோன்….நானும்
உயிர் குளிர்ந்துபோற்றுகிறேன்! நல்லூர்க் கந்தன்
சங்கைபுகழ் திருநிறைந்தவாழ்வுஅள்ளித்
தந்திடுவான் நானறிவேன்…வாழ்த்துகின்றேன்.