தாய் தந்தை காக்காத போதும்… எந்தச்
சகோதரமும் காக்காத போதும்… சுற்றம்
வேறுறவு குடும்பம் நட்பு காக்காப் போதும்
வெறும்பணமும் பேர்புகழும் காக்காப் போதும்
யாரெவரும் துணைக்குவராப் போதும்… யானும்
யமன்முதுகிற் சவாரி செய்வேன்!காலம் என்னைக்
காப்பாற்றும் என்பிறப்பின் கடமை தீர்க்கும்
கணம் வரைக்கும்!மிகத்தெளிவாய் இடர்கடப்பேன்!
காலத்தை நம்பியவர் தோற்றதில்லை.
காலத்தை மதியாதோர் ஜெயித்ததில்லை.
காலமிடும் முடிச்சுகளை அவிழ்க்கக்… காலம்
காட்டிநிற்கும் வழிவகையைக் கண்டு தேறி
காலத்தின் சூக்குமங்கள் உணர்ந்து மீறி
கடந்ததற்கு விசுவாசம் கூறி… வாழ்ந்தால்
காலமென்றும் காத்தருளும்!தடைபடியாய்
கால்களேற வைத்தணைக்கும்… காயம் மாற்றும்!
காலமென்பதெது? கடவுள்தானா? எல்லாம்
கட்டியவிழ்த்திடும் இயற்கை விதியா? கோடி
மாற்றத்தை ஒரு சீராய்ச் செய்து, மீறும்
மனங்களை மீள் ஒழுங்கமைத்து சமநிலையை
ஏற்படுத்தித் தொடர்ந்தியங்கும் சக்திதானா?
எதுவாக இருந்தாலும் காலம் என்ற
ஓர்பொருளிங் கிருக்கிறது உணர்ந்தேன்… என்னைப்
படைத்த அது எனைக்காக்கும்@ உறுதி கொண்டேன்!