காலம் மீட்டெடுக்கும்

காலமென்ற ஒரு பொருளுள்ளது!
காலம் எதையுமே தீர்மானஞ் செய்வது!
காலமே எதன் வெற்றிக்கும் தோல்விக்கும்
காரணம் அதே வாழ்த்தவும் வீழ்த்தவும்
காரணம் எந்தக் காரியப் பூர்த்திக்கும்
காரியம் தடைப்பட்டுக் கிடக்கவும்
காரணம் காலம் கனிந்து வரும்வரை
காத்திருத்தலே… வாழ்வின் இரகசியம்!

காலம் ஒன்றைத்தான் நம்பி நடக்கிறேன்.
“காலம் காப்பாற்றும் நிச்சயம்” சொல்கிறேன்.
காலம் இன்றெனைக் கணக்கில் எடுக்காது
கடக்கலாம் நாளை கையைப் பிடித்துமே
தூக்கி வாழ்த்திடும் நம்பினேன்! என்கவித்
துளிகள் தங்கமாம்… அவற்றை மினுக்கி ஓர்
நாள் உலகம் விலைகொடுத்தே வாங்க
வைக்கும் உறுதிஎன் கவிக்கடன் செய்கிறேன்!

“ஆகா அற்புதம்” என்று மனிதர்கள்
அற்பமானதை அங்கீ கரிக்கலாம்!
“ஏதும் பொருளற்றதிது”என என்கவி
தன்னை ஒதுக்கிப் புதைக்க முயலலாம்!
மானுடர்களை நம்பேன் அவர்களை
மண்ணோடு மண்ணாக மாற்றிய காலம்… என்
ஆற்றலைப் புதையல் என்றே மீட்டு
அருளும் ஓர்தினம் ஊர்க்கு… யான் வெல்லுவேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply