நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல்
சீரால் சிறப்புகளால்
நாளும் செழிப்புற்று
ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும்
யாழ்இந்துத் தாயின்
யௌவன அருட்கழலில்
ஆறி அமர்கையிலே…
அவள்தத் தெடுத்த சேய்கள்
யாவரும் மகிழ்வை அனுபவிப்பர் மிகநெகிழ்ந்து!
யாழ்இந்து எனும்சொல்லைக்
காதாலே கேட்டால்..மின்
சாரம் பரவுவதாய் உடலில்எழும் புத்துணர்வு!
சைவம் தமிழைஇரு கண்ணாயும்
மானத்தை
நெற்றிக்கண் என்றும்
நினைத்துக் கலைபெருக்கும்
அற்புதத் தலமிதற்கு உவமையேது?
விழுமியஞ்சேர்
பழமையினைப் போற்றி,
புதுமைகளை ஏற்றி,
அதிநவீனம் ஆங்கிலமும் அகமிருத்தி
உலகொழுங்கின்
வியாபகத்தை உள்வாங்கி
விவேகம்பெற் றொளிருதிது!
வீதிக்கு வீதி வித்யாலயம் வரினும்
யாழ்இந்து நிழலைஅவை
நெருங்கவே முடியாது!
கல்வி கலைத்தரத்தைக்
கருத்தில் எடுத்தாலோ…
வல்லஇந்துவின் அருகே வரஎவரும் கிடையாது!
எத்துறையில் கற்றவர்கள் எனினும்
அனைவருமே
முத்திரை பதிப்பர்தம் துறையில்இது தவறாது!
ஆய கலைகள் அறுபத்து நான்கினிலும்
வேறுவேறு உயரங்கள் தொட்டுத்தம்
பெருமைகட்கு
யாழ்இந்து அன்னைதான்
காரணமென் றுரைத்துச்
சேய்கள் சிலிர்ப்பதைவே
றெங்கு(ங்)காண ஏலாது!
வைத்திய நிபுணர்,
பொறியியல் வல்லுனர்கள்,
நாடாழ்வோர், நிர்வாகர், நல்லறிஞர்,
அரசியலில்
வாழ்பவர்கள், சட்டமா அதிபர்கள்,
அவைஆழும்
நாவலர்கள், இலக்கிய மேதைகள்,
நற்கவிஞர்,
பேரழியா அதிபர்கள், பெருமைமிகு ஆசான்கள்,
மானமற வீரர்கள்,
மக்களுக்காய் வாழ்பவர்கள்,
விளையாட்டு விற்பன்னர்,
வியாபார வைரங்கள்,
என்றபடி எத்தனைபேர் இன்றுவரை
யாழ்இந்து
நிழலால் புடம்போடப் பட்டொளிரும் தங்கமானார்..?
எண்ணிலிது அடங்காது!
இதோர் தனித்த வரலாறு!
ஞான வயிரவரின் ஆன்ம பலத்துடனே…
சூழும் குலதெய்வம்
ஆசீர் வதிக்கையிலே…
மாபெரிய ஞானியர் மகான்கள் மகாபுருஷர்
கால்பட்ட காரணத்தி னாலே
தளைத்தெழுந்து
வானளையும் வகுப்பறைகள்,
பிரார்த்தனை அரங்கம்,
அதிபர் அலுவலகம்,
முன்நிமிரும் கட்டடம்..நற்
சபைகூடும் குமாரசாமி மண்டபம்,
அன்றொருநாள்
ஒடுங்கி இன்றைக்கோ
விரிந்திருக்கும் மைதானம்,
பல்லாயிரம் மைந்தரைப் பார்தணைத்த அரசடி,
ஒருகால் மிளிர்ந்து…உறங்கி
இன்று உயிர்க்கும் விடுதி,
இடைவேளை இனிமைகளைப்
பகிருகிற கன்ரீன்கள்,
ஆய்வுகூடம், சித்ரகூடம், அதிபரில்லம்,
ஒன்றாகச்
சேர்ந்து குட்டி இராச்சியமாய்
சிறந்தது இந்துத் தாய் வீடு!
‘வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி
வையகம் புகழ்ந்திட என்றும்’
எனும் மந்திரமே
இன்றும் மனச்செவியில்
இடையறாது ஒலிக்கிறது!
வார இறுதிவெள்ளிப் பிரார்த்தனைச் சிவபுராணம்,
மாதாந்தப் பண்டிகைகள்,
சரஸ்வதி பூஜை, பின்
அடிக்கடி வரும்வேறு உற்சவங்கள்,
கொண்டாட்டம்,
தமிழ்த்தினம், பரிசளிப்பு,
விளையாட்டுப் போட்டி..திறம்
கிரிக்கட் விறுவிறுப்பு, ஒன்றுகூடல்,
இவற்றையெல்லாம்
ஒவ்வொன்றாய் நினைவுகூர
மனம்மீண்டும் மாணவனாய்
மாறிக் கடந்தகாலச் சொர்க்கமெனும்
தேன்குளத்துள்
அமிழுகிற வண்டாகி
ஆனந்தம் கொள்கிறது!
அன்றிருந்த ஆசிரியர்,
அவர்களது ஸ்ரைல்..பேச்சு,
அன்று நடந்தவைகள்,
ஆயிரம் வகைக் கதைகள்,
ஒன்றாய் படித்தின்று உலகெல்லாம்
பறந்துவெல்லும்
நண்பர் நினைவில்என்
நிகழ்காலம் மறக்கிறது!
எங்கெங்கோ சென்றாலும்,
ஏதேதோ வேடங்கள்
அங்கேதோ பாத்திரங்கள்
ஏற்றின் றிருக்கையிலும்,
‘இந்துவின் மைந்தர்கள்’ எவருமே
சோடைபோனது
இல்லையெனும் அசரீரி திமிரொன்றை ஊட்டிடுது!
பிரமிக்க வைக்கின்ற
சாதனைச் சரிதத்தை
உலகிலெங்கு நிகழ்த்தினாலும்
யாழ்இந்து அன்னையை நினைவுகூர்ந்து
உணர்வுபூர்வ
மாகநன்றி சொல்லிச்சேய்
நெஞ்சை நிமிர்த்தையிலே…
நீலவெள்ளை நிறமான யாழ்இந்து அன்னையவள்
தாவணியாம் தனிக்கொடியோ
பட்டொளி பரப்பியெங்கள்
மனக்கண்முன் பறக்கிறது!
அதைக்காணும் கணங்களிலே
உடல்தானாய் விறைத்தெழுந்து
மரியாதை செய்கிறது!