கனவுக் கனிநூறு காய்த்துக் குலுங்குகிற
மனமரமோ இன்று
இலையுதிர்த்துக் கனிகளற்று
வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய
நின்றிருக்கு.
இரவு பகலென்று இல்லை
மழைவெய்யில்
பனியோ குளிரென்றோ பார்த்ததில்லை.
மனமரமோ…
தினந்தோறும் காய்த்துக் கனிந்து
சிறந்ததன்று!
கனவுகளைக் காய்க்கும்
மனமரம் தன் வேர்விட்டு
நிற்கும் நனவு உடல்நிலத்தில்… நேற்றைக்கு
பற்றிப் படர்ந்ததுகாண்
பயமென்னும் ஓர்நெருப்பு!
இந்தப் பயநெருப்பு காட்டுத்தீ போலெழுந்து
எந்தத் திசைகளிலும்
பரவிப் பொசுக்கியதால்…
நனவு உடல்நிலமும் பொசுங்கிக் கருகிற்று.
நனவு உடற்தரையில்
நன்றாய்க் கிளைத்திருந்த
கனவுகளைக் காய்க்கும் மனமரம்
இவ் அனற்புயலில்
முற்றாய் எரிந்துவிட
கனவுக் கனிகளெலாம்
சாம்பலாகிப் போச்சு!
எப்படித்தான் பயநெருப்பு
மூண்டு என்மேல் முழாசிற்று?
நீபோட்ட
இடைவிடா வெடியோசை
அகத்தை உலுக்கவந்த
அனற்பயமோ என்னை
தீக்குளிக்கச் செய்திருக்கு