தமிழ் மரபுக் கவிதை- த.ஜெயசீலன்

மரபு என்றால் என்ன? எமது வழிவழிவந்த வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், தொடர்ச்சியான வரலாறு, கலாசாரம் இவை இணைந்ததே மரபு எனப் பொதுவாகக் கூறலாம்.

இந்த மரபு நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மால் தலைமுறை தலைமுறையாய் கைக்கொள்ளப்பட்டு வந்தது, கைக்கொள்ளப்பட்டு வருகிறது. வரும்.

எமது மரபு கீழைத்தேய மரபாகும். கீழைத்தேய மரபின் வாழ்க்கைமுறை உணர்வை அடிப்படையாகக் கொண்டது. இது இன, சமய, மொழி, சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டது. அதில் பல தேவையான, தேவையற்ற விடயங்கள் உள்ளது என்பது வேறு. ஆனால், மேற்கத்திய மரபு என்பது அறிவை அடிப்படையாகக் கொண்டது. எதையும் சிந்தித்து விவாதத்திற்குள்ளாக்கி அறிவுபூர்வமாக அணுகும் தன்மையுடையது.

மரபுகள் ஒருபொதுவான தளத்தில் ஒரு நீட்சியை, தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கால ஓட்டத்தில் புதியன புகுந்தும் பழையன கழிந்தும் மரபு தன்னைப் புதுப்பித்துக் கொண்டே நகர்ந்தது. நகர்ந்து கொண்டிருக்கிறது, நகரும். எங்கள் மண்ணின் வரலாற்றுத் தொடர்ச்சி தலைமுறை தலைமுறையாக வழங்கி வந்து எங்கள் மண்ணிற்குரிய மரபாகி இன்றும் இருக்கிறது.

அவ்வாறான எங்கள் மரபின் ஒரு கூறாக எங்கள் கவிதை மரபும் திகழ்கிறது. இற்றைக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான மிகநீண்ட இலக்கிய அல்லது கவிதைமரபு தமிழர்களாகிய எங்களிடம் உண்டு. இது எங்கள் தலைமுறை உரிமையான பாரம்பரியச் சொத்து. எமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம். தமிழில் ஆரம்ப காலத்தில் இருந்து இலக்கியத் துறையில் கவிதையே முக்கியமானதாக திகழ்ந்ததால் கவிதை மரபையே இலக்கிய மரபாகவும் காணலாம்.

இந்த கவிமரபு ஆரம்பத்தில் இருந்தே செய்யுளை தன் ஊடகமாகக் கைக்கொண்டது. செய்யுள் என்பது வெவ்வேறு யாப்புக்களால் ஆக்கப்பட்டிருப்பது. இப்படி இப்படித்தான் யாப்பின் வரையறை இருக்கவேண்டும் என்ற கறாரான நிபந்தனைகளுக்குட்பட்டது.

கவிதை மட்டுமல்ல. சோதிடம், தத்துவம், மருத்துவம் என்பன கூட செய்யுளை ஊடகமாகக் கொண்டே தோன்றியிருந்தன. அச்சு ஊடகம் இல்லாத தொன்மையான காலத்தில் செவிவழியில் செய்யுளை மனனம் செய்வதன் மூலம் அவ்வவ் விடயங்களை ஞாபகத்தில் வைத்திருந்து அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்துதற்கு செய்யுள் ஊடகம் உதவிற்று. கவிதையும் அக்காலத்தில் செய்யுளைத் தனது பயண ஊடகமாகக் கொண்டிருந்தது. செய்யுள் என்பது கவிதையல்ல. என்றாலும் காலத்துக்கு காலம் தேவைக்கு ஏற்ப செய்யுள்களின் வகைகள், அதன் வடிவம் என்பன மாற்றத்துக்கு உள்ளாகி எமது கவிதையைத் தாங்கி வந்திருக்கிறன. சில செய்யுள் வடிவங்கள் சில காலத்தில் மேலோங்கியிருந்தன.

உ-ம் சங்ககாலம் – அகவற் பா
சங்கமருவிய காலம்; அல்லது கலித்தொகைக் காலம்- கலிப்பா
பல்லவர் காலம் அல்லது தேவார காலம் – சந்த வகைகள், விருத்தப் பாக்கள் என
கவிதையின் ஊடகமான செய்யுளுக்குரிய யாப்புகள் காலாகாலத்தில் மாற்றத்திற்குள்ளாகி வந்திருக்கின்றன. எப்படி யாப்புகளில் வௌ;வேறு காலத்தில் வேவ்வேறு யாப்பு வகைகள் பிரபலம் பெற்றிருந்தனவோ அதேபோல எதைஎதைத் கவிதையில் பாடப் படவேண்டும் என்பதும் அதாவது பாடுபொருளும் காலாதி காலத்தில் வேறுபட்டுக் கொண்டே வந்துள்ளது.

கவிதை என்பது தனித்துவமான ஒரு கலைவடிவம். கலையின் அதிஉச்சமான சாத்தியப் பாடுகளைக் காட்டுகிற, மிகமிகச் செம்மையான, மொழியின் அரசியான, ஒரு முக்கியமான கலைவடிவம். உலகிலுள்ள அனேகமான எல்லா மொழி இலக்கியங்களிலும் கவிதையே உச்சமான கலைவடிவமாக இருநடதிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

ஒரு விடயத்தை, ஒரு காட்சியை, ஒரு சம்பவத்தை, ஒரு அனுபவத்தை, ஒரு நுண்உணர்வை, ஒரு சிந்தனைப் பொறியை (கடயளா) அழகோடும், நேர்த்தியோடும், பேசுகிற அதே நேரம் அதனூடு ஒரு அறத்தை, உண்மையை, வாழ்வியலின் தாற்பரியங்களில் ஒன்றை அல்லது பலதைக் காட்டுவதாக அமைவது கவிதை எனலாம். மேலும், இவ்விடயங்களை ஒரு புதிய, முன்பில்லாத எவரும் நினைத்திராத கற்பனையின் மூலம், வௌ;வேறு உத்திமுறைகளைக் கையாள்வதன் மூலம், இரசிகர்களுக்கு வாசகர்களுக்கு புதிய புரிதலை, “இதை நாம் இப்படிப் பார்க்கவில்லையே” என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி அவர்களின் உணர்ச்சியைக் கிளறி, பின் அதை ஆற்றுப்படுத்தி, ஏதோ ஒரு பரவச நிலைக்கு, மனப்பாங்கு மாற்றத்துக்குக் கொண்டு செல்வதும் கவிதையின் இயல்பு ,பண்பு, சமூகப் பொறுப்பு எனலாம்.

கவிதை ஒரு கண்டுபிடிப்பு. கவிஞனும் ஒருவகையில் விஞ்ஞானிதான். இயற்கை, உலகம், வாழ்க்கை, பிறப்பு இறப்பு, இவ்வாறான இன்னும் இன்னும் எத்தனையோ ஏற்கனவே மறைத்து வைத்த எண்ணற்ற புதிர்களை தன் நுண்அவதானிப்பில் கண்டு, அவற்றைத் துலக்கி, அவற்றின் சூக்குமங்களை விடுவித்து, சாதாரணர்களும் புரிந்து தெளிவு கொள்ளக் கூடியதாக, அவர்களுக்குக் கலங்கரையாக கவிதை விளங்க வேண்டும்.

இதுவே கவிதைக்கான அடிப்படை. இதற்கு மேலாக உவமானம், உவமேயம், உருவகம், படிமம், போன்ற அணிகளின் பிரயோகம் கவிதையின் அழகை, சுவையைப் பெருக்கும். எதுகை மோனை போன்ற தொடை வகைகள் கவிதையின் ஓசை ஒத்திசைவை மேம்படுத்தும். யாப்பு என்பது ஓசையை அடிப்படையாக கொண்டது. எத்தனையோ யாப்புக்கள், சந்த வகைகள், இன்று வழக்கொழிந்துவிட்டன. உ-ம் நான்கு பாவகைகளில் ஒன்றான வஞ்சிப் பா இன்று அதிகம் பயன்படுத்தப்படாமலே மறைந்துவிட்டது. எத்தனையோ சந்தவகைகள் இன்று பயன்படுத்தப்படுவதே இல்லை. காலத்துக்கேற்ப, சொல்முறைக்கு இலகுவான, எளிமையான யாப்பு வகைகளை, சந்த வகைகளை பயன்படுத்தக்கூடிய நிலையே என்றும் காணப்பட்டிருக்கிறது. இந்த யாப்பைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை எந்த இலக்கண நூலும் விதித்திருக்கவில்லை. ஆனால் சில யாப்புகளுக்கு தனித்தன்மையான ஓசைகள் உண்டு. பொருத்தமான இடங்களில் அவை பயன்படுத்தப்படும் போது கவிதையின் கனதி அதிகரிக்கும்.

கவிதையில் உள்ளூற இருக்கின்ற ஓசைநயம், ஓசைஒழுங்கு கவிதைக்கு அவசியமானது. இது இயல்பாகவே சொற்களுள் உள்ளுறையும் ஓசை நயத்தின்(அசைகள்) தொடர்ச்சியாக பிறப்பது. இது உரைநடையில் காணப்படுகிற தட்டையான மிகமிக குறைவான ஓசை ஒழுங்கோ, அல்லது சங்கீதத்தில் இசையில் உள்ள மிகச் செறிவான ஓசை ஒழுங்கோ அல்ல. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட தனித்துவமான ஓசை. இதுவே கவிதையின் இயல்பான ஓசைநயம் ஆகும்.

மொழியின் சொற்கள் எழுத்துக்களால் ஆனவை. தமிழ் எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்எழுத்து(ஒற்று), உயிர்மெய் எழுத்து ஆகிய எழுத்து வகைகளால் ஆனவை. சொற்கள் ஒவ்வொன்றும், அவற்றின் எழுத்துக்கள் இணைந்து தோன்றும் இரு வகையான அசைகளால் ஆனவை என்பது மிகமிக வியப்பிற்குரியது. எந்த ஓர் சொல்லுக்குள்ளும் இந்த அசைகளால் ஆன இயல்பான ஒலி பொதிந்துள்ளமை மிகப்பெரிய ஆச்சர்யம் தான்.

எழுத்து—-அசைகள்—-சொல் என சொற்கள் உருவாகின்றன.

இரு வகையான அசைகள் தான் உலகில் உண்டு. சகல மொழிச் சொற்களும் இவ் இரு அசைகளால் ஆனவையே. இது இசைக்கு ஏழு சுரம் போன்றது.
‘நேர்’ அசை—1.தனிக்குறில் உ-ம் ‘த’
2.தனிநெடில் உ-ம் ‘தா’
3.குறில் உடன் ஒற்று உ-ம் ‘தன்’
4.நெடில் உடன் ஒற்று உ-ம் ‘தான்’

‘நிரை’ அசை—-1.குறில் உடன் குறில் உ-ம் ‘கல’
2.குறில் உடன் குறில் உடன் ஒற்று உ-ம் ‘கலம்’
3.குறில் உடன் நெடில் உடன் ஒற்று உ-ம் ‘கலாம்’

உ-ம் ‘வருகிறான்’ எனும் சொல் – இது இரு அசைகளால ஆனது. ‘வரு’, ‘கிறான்’ என இச்சொல்லைப் ஓசை அடிப்படையில் பிரிக்கலாம்.
இவை அசைகளின் படி – நிரை நிரை
இவ்வாறு சகல சொற்களும் அசைகளால் ஆகியவையே. கவிதைகளில் வரும் சொற்களைச் சீர்கள் என்று அழைப்பர். சீர்கள் இருஅசைச் சீர்களாக அல்லது மூன்றசைச் சீர்களாக காணப்படலாம்.

ஈரசைச்சீர்— ‘வந்தான்’ —‘வந்’ ‘தான்’ இது அசையாக…‘நேர் நேர்’
மூவசைச்சீர் —‘வந்திருப்பான்’—‘வந்’ ‘திருப்’ ‘பான்’…இது அசையாக -‘-நேர்’ ‘நிரை’ ‘நேர்’
இந்த ஓசை சீராக ஒழுங்குபடுத்தப்படும் போது கவிதைக்குரிய உயிர்ஓசைப் பண்பு உருவாகிறது. சீர்கள் இணைந்து கவிதையின் ஒரு அடியைத் தோற்றுவிக்கிறன.

எழுத்து—அசை—சீர்( சொற்கள்)—அடி

இதனை தளைகள்(joints) மேலும் செம்மைப்படுத்தும். தளைகள் என்பவை அடுத்த அடுத்த சீர்களுக்கிடையில் ஏற்படும் ஓசை அதிகரிப்பு, அல்லது குறைவு என்பவற்றைக் குறைத்தோ கூட்டியோ செம்மைப் படுத்துபவை. சரியான தளை ஒழுங்கிலுள்ள அதாவது ‘தளை தட்டாத’ கவிதை அடியல், செப்பமான சீரான ஓசை ஒழுங்கை நம் காதாலேயே கேட்;டுணரலாம்.. தளை தட்டிய கவிதை அடி, சுருதி பிசகிய இசையை ஒத்தது. அவ்வாறான கவிதையைக் கேட்கும் போது பிசிறலைத் தெளிவாக நாம் கேட்டு உணர முடியும். கவிதையைக் கேட்கும் போதே தளைதட்டுகிறது என்ற கூறும் கவிஞர் பெருமக்கள் இன்றும் உள்ளனர்.

இது மிகமிக நுட்பமானது என்றால் மிகையில்லை. உ-ம் கட்டளை கலித்துறை என்னும் யாப்பில் சரியாக (தளைதட்டாமல்) எழுதப்பட்ட ஒரு கவிதை அடியில் 16,17 உயிர்எழுத்துக்கள் வரும் என(மெய் எழுத்து கணக்கில் எடுக்கப்படுவதில்லை) இலக்கண நூல்கள் கூறுகின்றன. இது மிகப்பெரிய அறிவியல், கணித நுட்பம். எழுத்துக்களின் ஒலியளவைக் கணித்து அவை சேரும்போது தோன்றும் ஓசையைக் கொண்டு ஒரு கவிதை அடியில் எத்தனை எழுத்துக்கள் வரும் எனக் கூறிவிடுகின்றன.

பட்டினத்தார் ஒரு வணிகர். பெரும் படிப்பாளி அல்ல. யாப்பிலக்கணம் கற்றவர் அல்ல. திடீரென்று ஞான நிலை பெற்றபின அவர் பாடிய பாடல்கள் அல்லது கவிதைகள் மிக நேர்த்தியான கட்டளைக் கலித்துறை, வெண்பா, ஆறுசீர் விருத்தங்களாக காணப்படுகின்றன. இவர் சீர், தளை அறிந்து இவற்றைப் பாடவில்லை. ஓசைச் செம்மையுடன் பாடிய அவரின் பாட்டுகளின் யாப்புகளில் எந்தப் பிசிறும் இல்லாதுள்ளமை இரசனைக்குரியது.

அடுத்தடுத்த சீர்கள் தழைகளூடு செம்மையாக இணையும் போது காதுக்கினிய ஓசைப் பண்பு ஊற்றெடுக்கிறது. இந்த ஓசை மனத்தை வசியப்படுத்தும் அதே நேரம் மனதில் இலகுவாகப் பதிந்து மனனமாகிவிடுகிறது. செம்மை குறையும் போது அல்லது இவை பற்றி அக்கறை எடுக்கப்படாமல் விடப்படும் போது இரைச்சல் அல்லது இயல்பு பாதிக்கப்பட்ட சத்தம் உருவாகிறது.

எழுத்து, அசை, சீர், அடி …. என ஒரு சீரான ஒழுங்கு தொடரும்போது கவிதையின் கவிதைக்கென்றான ஓசை உருவாகிறது. இதனையும், இதன் வகைவிரிவுகளையும் யாப்பு இலக்கணம் எடுத்துக் கூறுகிறது. தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை போன்ற பழந் தமிழ் நூல்கள் தமிழ்க் கவிதை யாப்பைப் பற்றி மிக விரிவாக ஆழமாகப் பேசுகின்றன. விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.

ஒரு கவிதையின் ஓசைச் சிறப்புக்கு மேற்சொன்ன அசை, சீர், தளை, தொடை என்பன அவசியம் என்கின்றன இலக்கண நூல்கள். தொடைகள் யாப்பின் கூறுகளாகும் இதில் எதுகையும் மோனையும் அடங்குகின்றன.

எதுகை என்பது அடுத்தடுத்த எழுத்துக்கள் ஒன்றாக உள்ள சொற்கள்(சீர்கள்)
உ-ம் 1. என்றன், உன்றன். சென்றன்.
2. கல்லு, வில்லு, பொல்லு.
மோனை சீர்களின் முதல் எழுத்து வரிசை தொடர்ந்து வருவது.
உ-ம் 1. பாட்டைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா
இங்கு முதல், மூன்றாம் சீரில் உள்ள ‘பா’ மோனை.
2. ஓசைதரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ
இங்கு முதல், மூன்றாம் சீரில் உள்ள ‘ஓ’ ‘உ’ மோனை.

தமிழ் யாப்பில் பல வகைகள் உள்ளன. அடிப்படையாக
பாவகை
1.அகவல்பா அல்லது ஆசிரியப்பா – ஒருவர் பேசுவது போன்றது – அகவல் ஓசையுடையது. உ-ம் கந்தசஸ்டி கவசம்
2.வெண்பா – இருவருக்கிடையேயான உரையாடல் போன்றது – செப்பல் ஓசையுடையது. உ-ம் நளவெண்பா
3.கலிப்பா – தாழ்ந்தும் உயர்ந்தும் செல்லும் ஓசையுடையது – துள்ளல் ஓசை. உ-ம் பாரதியின் குயில்பாட்டு
4.வஞ்சிப்பா – தாழ்ந்த ஓசை – தூங்கல் ஓசை

பாவினம்: மேற்சொன்ன பாவகைகள் ஒவ்வொன்றும் மூன்று இனங்களைக் கொண்டிருக்கின்றன.அவை
• தாழிசை
• துறை
• விருத்தம்

மேற்சொன்ன ஒவ்வொரு பாவகையும் அப் பாவினங்களால் வெவ்வேறு வகையான யாப்புகளாக பெருகும்.

அகவல்பா– நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டடில ஆசிரியப்பா
வெண்பா – இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, கலிவெண்பா
கலிப்பா – வெண் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா
இவற்றை விட சற்று ஓசைப்பண்பு கூடிய சிந்துகள், கண்ணிகளும் தமிழில் வழக்கத்திலுள்ளன.

சிந்துக்கள் – நொண்டிச்சிந்து, சமநிலைச்சிந்து, காவடிச்சிந்து
கண்ணிகள் – கிளிக் கண்ணி

விருத்தப்பா – இது வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்தது என்பர். வில்லிபுத்தூரரின் பாடல்கள் விருத்தங்கள். கம்பன் தனது கம்ப இராமாயணத்தில் சுமார் 60 வகையான விருத்த வகைகளைக் கையான்டிருக்கிறான் என்பர். தொல்காப்பியமானது யாப்புக்கள் எண்ணற்றுப் பல்கிப் பெருகக் கூடியன என்பதைக் காட்டியிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு சீரின் அசைகளையும் மாற்றும் போது வேறு வேறு ஓசை லயப்பட்ட யாப்புக்கள் உருவாகும். இவ்வாறு எண்ணற்ற யாப்புகள் புழக்கத்திலுள்ளன. அருணகிரி நாதரின் திருப்புகழ் கவிதைகள் தாள வாத்தியங்களின் தாள லயத்தை நேரடியாக சந்தங்களாக்கி அமைக்கப் பட்டுள்ளன.

உ-ம் தாளவாத்திய ஓசை: டண்டடடண் டண்டடடண் டண்டடடண் டண்டா
சந்தம்: தானனனத் தானனனத் தானனனத் தானா
பாடல்: ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்று.

கவிதையின் ஓசைச் சுவை இன்று அவசியமில்லை என்றும், அச்சு யுகம் வந்ததால் கவிதையின் ஓசையை இரசிக்கவோ, சுவைக்கவோ, அதை மனனம் செய்யவோ வேண்டியதில்லை என்றும் புதுக்கவிதையாளர்கள் கூறுகிறார்கள்.

கவிதையிலுள்ள இந்த இயல்பான ஓசைச்சுவையை ஏன் இன்று நாம் இரசிக்கக் கூடாது? ஏன் புறக்கணிக்க வேண்டும்? அது ஒன்றும் தீட்டானது அல்லவே. கவிஞர் முருகையன் சொன்னது போல் நாம் இன்று காதுகளை அல்லது செவிப்புலனை கழற்றி வைத்து விட்டோமா? இல்லையே! நாளை எங்கள் தலைமுறையினர் செகிடர்களாகச் சபிக்கப் பட்டிருக்கிறார்களா? இல்லையே! சிந்தனையுகம் என்று விட்டு சங்கீத இசையை புறக்கணித்து விட்டோமோ? இல்லையே!

புதிய சிந்தனைகள், புதிய விடயங்கள், புதிய கோட்பாடுகள், எமது மொழிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். சமகால அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கேற்ப கலை மாற்றங்களை நாழும் வரவேற்றேயாக வேண்டும். தற்கால உலகின் நவீன இலக்கிய செல்நெறியை, போக்குக்களை நாம் கட்டாயம் அறிந்திருக்கவே வேண்டும். அவற்றை இன்றைய நமது படைப்புக்களில் வெளிப்படுத்தவும் வேண்டும், எம்மிடம் உள்ள இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை விலக்கி புதியவை தேடி நாம் முன்சென்றே ஆக வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துகளும் யாரிடமும் இல்லை.

அதற்காக தமிழ்க் கவிதையின் தனித்துவமான பண்புகளை நாம் ஏன் முற்றாக புறக்கணிக்கவேண்டும். இவற்றைத் தவிர்ப்பதே மேதமையென்று புதுமை பேச வேண்டும்?

ஏனைய மொழிக் கவிதைகளிலும் ஏதோ ஒரு ஓசை, ஒத்திசைவு, சந்தம் உள்ளது.
உ-ம் ,twinkle twinkle little star…
என்ற ஆங்கில கவிதையை நாம் அறிவோம்.

இது “தனனத் தனனத் தானானா” என்ற சந்தக் கட்டமைப்பைக் கொண்டது. இது தமிழில் உள்ள ஆறு சீர் விருத்த வகையைச் சேர்ந்தது. பொதுவாக ஆங்கிலத்திலுள்ள ஓசைவயப்பட்ட கவிதை அடியின் இறுதிச் சீரில் எதுகை அமைந்திருக்கும். இதே போல சிங்களத்திலுள்ள சிந்துகளிலும் ஒரே வகையான எதுகைகள் ஒவ்வொரு அடிகளின் இறுதியிலும் இடம்பெறுவதைக் காணலாம். ஹைக்கூக்களுக்கும் அவற்றின் மூன்று அடிகளும் ஒரு அளவிலேயே அமைந்திருக்கும். ஆக எல்லா மொழிகளிலும் கவிதையின் ஓசைப் பண்பு என்பது ஏதோ வகையில் இருந்தே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கவிதைக்கு இயல்பான ஓசை ஒழுங்கு உண்டு என்பதை வலிந்து மறுத்து, அது இதயத்துக்குரியது அல்லது உணர்ச்சிக்குரியது உயிப்பானது என்பதை மறுத்து, அது இயங்கும் அசையும் பிறரைப் பிணிக்கும் அல்லது தொற்றும் தன்மையுடையது என்பதை மறுத்து, அதை வெறும் தட்டையான சிக்கல் மிகுந்த, புரிந்துகொள்ள முடியாத, மூளைக்கு, அறிவுக்குரிய, வரட்சியான, உயிர்ப்பிலாத, இருண்மை மிகுந்த, இறுகிய ஒரு பிரதியாக முன்னிறுத்தும் கைங்கர்யம் நடந்துவருகிறது. ஆரம்பகால புதுக்கவிதையாளர்கள் ஒரு சீரான கவிதை அடியில் வலிந்து ஓரிரு சொற்களைச் சேர்த்து , அல்லது தவிர்த்து வேண்டுமென்றே ஓசை ஒத்திசைவு வராமல் பார்த்துக்கொண்டதையும், கவிதை வரிகளை துண்டுதுண்டாக உடைத்து எழுதி ஒழுங்கு வராமையை எண்பிக்க முயன்றதையும் கூறலாம்.

தமிழ் கவிதை மரபின் இடைப்பட்ட ஒரு காலத்தில் கவிதை அர்தததமற்ற சோடனைகளை, வார்த்தை ஜாலங்களை, வெற்று ஓசை வெளிப்பாடுகளைக் கொண்டு அரசவைகளிலும், அந்தப்புரங்களிலும், பண்டித பவனிகளிலும் முகமிழந்து கிடந்தது என்பது உண்மையே. அது அந்தக் காலத்தின் கோலம், அல்லது அக்காலக் கவிஞர்களின் ஆற்றலின்மையின் சோகம். அது கவிதையின், கவிதை மரபின் குறைபாடல்ல. ஏனென்றால் எமது கவிதை மரபில் மிகச் சிறந்த, உலக இலக்கியங்களில் காணக்கிடையாத, கவிதைகளுக்கான எண்ணற்ற உதாரணங்கள் காணக் கிடைக்கின்றன.

சந்தங்கள், யாப்புக்களில் இன்றைய காலத்துக்கும், இன்றைய பாடுபொருளுக்கும் பொருத்தமானவை எவை என்ற புரிதலுடன், இயல்பான கவிதைக்குரிய ஓசையொழுங்குடன் கூடிய, சொற்சிலம்பங்கள் அவசியமற்ற சந்தவகைகளைத் தவிர்த்த, உலக ஓட்டத்துடன் புதிய விடயங்களை, மாற்றங்களை உள்வாங்கிய, எமது வாழ்க்கை முறைமை, எமது மண்ணின் தனித்துவமான வாசம் என்பவற்றை கைவிடாத, ஆரம்பத்தில் யான் சொன்ன கவிதைக்குரிய அடிப்படை இயல்புகளை உடைய கவிதைகள் எழுதப்பட்டால் அவை என்றென்றும் வாழும்.

கவிஞர் முருகையன் ஒருமுறை சொன்னார் “கவிதை மரபுக்கவிதையாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் புதுக்கவிதையாகவும் இருக்கவேண்டும்” என்று. இதன் கருத்து யாதெனில் கவிதை எங்கள் மரபுவழிவந்த கவிதை இயல்புகளை, வாழ்க்கையின் சாரங்களை, சொந்த முகங்களை கொண்டிருக்க வேண்டிய அதேநேரம் காலங்காலமாகப் பேசப்பட்ட புளித்துப்போன விடயங்களை உவமான உவமேயங்களைத் தவிர்த்து புதுமையான விடயங்களைத் தேடிப் பேசுவதாக, புதிய அணுகுமுறைகள், உத்திகளைக் புதுமையான கற்பனைகளை, புதுமைமிகு உவமான உவமேயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே.

இன்று மரபு மீறுவது என்பது ஓசையைச் சந்தத்தைப் புறக்கணிப்பது மட்டுந்தான் என்று பலர் கருதுகிறார்கள். உண்மையில் மரபை மீறுவது என்பது எங்கள் தலைமுறை உரிமையின் தனித்துவத்தைச் சிதைப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும். இன்றைய நவீன இலக்கியகள், நவீன கவிஞர்கள் ஏதேதோ வெளிநாட்டு இறக்குமதிச் சிந்தனைகளை, ‘இசங்களை’ தாமும் படியெடுக்கிறார்கள். அந்த அந்த நாட்டுச் சூழலுக்கு, மரபுக்கு, நாகரீகத்துக்கு, கலாசார வாழ்க்கை முறைகளுக்குரிய விடயங்களைச் சம்பந்தமேயில்லாமல் இங்கே தங்கள் படைப்புகளில் புகுத்துகிறார்கள். எங்கள் மண்ணின் மரபு வாழ்க்கை முறைகளுக்கு தொடர்பே இல்லாத விடயங்களை எம் வாழ்க்கை விழுமியங்களையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தம் படைப்புகளில் செருகுகிறார்கள். “இவ்வாறான படைப்புக்களே படைப்புக்கள் ஏனையவை படைப்புகளே இல்லை” யென்றும் அலட்சியப் படுத்தி ஒதுக்குகிறார்கள்.

இன்றைய உலகமயமாதற் பின்னணியில் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்து விழுங்கி ஏப்பமிட முனையும் பல்தேசிய நிறுவனங்களின் பரந்த சிலந்திவலை அரசியலை, மாயையை அறியாமல் எம் மரபுகளைக் நாமே கேலிசெய்து இழிவுக்குள்ளாகும் தந்திரங்களுக்கும் எந்தவித சமூகப் பொறுப்புணர்வுமின்றி எம்மவர்கள் எடுபட்டும் போகிறார்கள். இவர்கள் இதன் மூலம் பெற்றுக் கொள்வது சிறு அங்கீகாரத்தையும் சில விருதுகளையுந்தான். வேறெதையுமில்லை. இதால் விளையும் பாதிப்புக்கள் தனித்துவ அடையாளங்களைக் காக்க, வாழவைக்க முயலுவோரைத்தான் சென்று சேரும்.

எமது மண்ணோடு ஒட்டாமல், எமது வாழ்வோடு ஒட்டாமல், அதிமேதாவித் தனமாக சிந்திப்பதாக கூறிக்கொண்டு இருண்மை மிக்க, இலகுவில் புரிந்து கொள்ள முடியாத, பாலியல் வக்கிரம் மிகுந்த, படைப்புகளை தம் பரவச நிலையிலிருந்து படைப்பதாக இவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். எப்படி மரபுரீதியான இலக்கியங்களை படிக்க உரையாசிரிர் தேவை என்று ஒருகாலத்தில் மரபிலக்கியங்களை புறக்கணித்த இவர்களே, தமது படைப்புக்கள் தீவிர வாசிப்பால் மட்டும்தான் புரிந்துகொள்ளப்படும் என்று அபத்தமாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

வாழ்வியல் யதார்த்த உண்மைகளைத் தவிர்த்துவிட்டு, தாம்பிறந்த மண்ணில் மிதிக்காமல், அந்தர அரியணைகளை உருவாக்கி, தம்மையொத்த ஒருசிலரை வட்டஞ் சேர்த்துக் கொண்டு தங்களுக்குள் தாங்கள் முதுகுசொறிந்து கொண்டு அல்லது முட்டி மோதிக்கொண்டு நெஞ்சுக்கு நேர்மையின்றி பொய்யாக போலியான விடயங்களை எவரையோ திருப்திப் படுத்தும் பொருட்டு எழுதிச் செல்கிறார்கள்.

எங்கள் மரபுகளை முதுசங்களைப் பற்றி எள்ளளவும் அறியாமல், அவை பற்றி அறியவும் முனையாமல் சொந்த விருப்பு இரசிப்புகளை வெளிக்காட்டாது தாமே நவீனர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள். எமது பழைய கட்டடங்களிலும், நாற்சார் வீடுகளிலும், மரத் தளபாடங்களிலும், பித்தளைச் சாமான்களிலும், கோயிற் சிற்பங்களிலும், மர வாகனங்களிலும் உள்ள மரபுரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்று குரல்கொடுக்கும் பலர் எங்கள் கவிதையில் கலைகளில் மரபு பேணப்படுவதைத் தீட்டாகவே கருதுகிறார்கள்.

எமது கவிதை மரபு என்ற ஒன்றை நவீன கவிஞர்கள், விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோர் ஏற்றுக் கொள்வதே இல்லை. “அதில் ஒன்றுமே இல்லை அனைத்தும் வெறும் குப்பை” என்பதே அவர்களின் வாதம். எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் காலத்தை வென்று இன்றும் உலகுக்கு வழிகாட்டி நீதிசொல்லி உயிர்ப்போடு வாழும் அவை அனைத்தும் அற்பங்கள் என்பதே இவர்களின் அபிப்பிராயம். எங்கள் தொன்மையான விடயங்களை தொடர்ந்து இடையறாது கற்றுத் தேர்வதிலுள்ள பஞ்சி, பொறுமையின்மை என்பன இலகுவாக இவர்களை புதுக் கவிஞர்களாக, விமர்சகர்களாக மாற்றி விடுகிறதோ தெரியவில்லை.

எமது மரபுகளில், எமது கலை வடிவங்களில், யாப்புக் கவிதை வகைகளில் தேவையற்ற காலங்கடந்து போன, தள்ளிவைக்க வேண்டியவை உள்ளன என்பதில் எந்த ஐயங்களும் இல்லை. எமது மரபுக் கவிதை வரலாற்றின் இடைப்பட்ட ஒரு காலத்தின் கடுமையான சந்தங்களின் இரும்புப் பிடியில் சிக்கிக்கிடந்தது என்பதும், சமூக நலன் பாடாமல் அரசர்களின் அந்தப்புறங்களில் அழகுப் பொம்மைகளாக அவை கிடந்தன என்பதும், சாமானியனின் பாமரனின் வாடி வதங்கிய தோள்வலியைப் பாடாமல் சள்ளை வைத்த அரசர்களில் தோல் வலியைப் பாடின என்பதும், சமூக அவலங்களையும் அடக்கு முறைகளையும் பேசா மடந்தைகளாக பாராமுகத்தோடிருந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இவற்றுக்கான தீர்வுகள் மாற்றங்கள் எங்களிடமிருந்து வரவே இல்லை என்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அந்நிய இறக்குமதிகளினால் தான் இவற்றை தீர்க்க முடியும் என்று செல்லும் இவர்களின் நிலையும் மாறுவது போல் தெரியவில்லை.

எந்தவித அவசியமுமின்றி வடிவங்களை உடைத்தல் அல்லத தகர்த்தல் என்ற ஒரேயொரு கொள்கையுடன கிளம்பிய பின்நவீனப் படைப்புகள், இறுதியில்
ஓர்வடிவைச் சிதைத்து இன்னொரு வடிவத்தைப் பெற்றமையே யதாரத்தமாகியிருக்கிறது.

உ-ம், சிறுகதையின் வடிவைச் சிதைக்கிறோம் என்று வந்தவர்கள் எவரோ எங்கோ செய்ததைப் பார்த்து எமது சமூகத்தோடு ஒட்டாத பாலியல் வக்கிரங்களை கொட்டிக் கொண்டதுடன், கணிதச் சமன்பாடுகள் போன்ற வடிவங்களுக்குள்ளும், கயஉநடிழழம ளஅள துண்டுப் பிரசுரம், கடிதம், போன்ற வடிவங்களுக்குள்ளும் தம் சிறு கதைகளை திணித்துக்கொண்டு இயலபாகவே தம் படைப்பு அவ்வடிவத்தை தெரிந்து எடுத்துக் கொண்டது என்று கதைவிடுவதையும் அதைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம். மேற்படி புதியவையும் ஏதோ வடிவங்களே என்புதை ஏன் இவர்கள் புரிகிறார்களில்லை.

சூரன், சேவல் மயிலானதுபோல் வடிவங்கள் மாறுமேயன்றி அவை சிதைக்கப்பட முடியாதவை என்பது பரியாதா இவர்களுக்கு? இவர்களுக்கு இப்படியான புதுப்புது வடிவங்களில் அவர்களது படைப்புகள் தம்மைக் கட்டமைத்துக் கொண்டன என்பதை ஏற்றால்.. எப்படி அக்காலக் கவிஞர்கள் தமக்குகந்த யாப்புகளில் எழுதியதை நாம் தவறு என்று கூறமுடியும்?
“என்று தணியும் இந்த அடிமையின் மோகம்”
என்று பாரதியைக் கேட்கத் தோன்றுகிறது. பொய்யாயும், போலியாகவும், யாரையோ திருப்திப் படுத்துவதற்காகவும், எவரோ சிலரின் அரசியல் ஆதாயத்திற்காகவும் எழுதுபவர்களை என்னென்று சொல்லுவது?

எப்படி தமிழ் மரபுக் கவிதைகளில் அபத்தங்கள் இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத அளவு அபத்தங்கள் தமிழின் புதுக்கவிதைகளிலும் உள்ளன என்பதே மறுக்கமுடியாத யதார்த்தம். இதனாற்தான் இன்றும் ஒட்டுமொத்தமாக கவிதை ஒரு தேக்கநிலையில் உள்ளது என்றும், புத்தியைப் பிறாண்டாத உணர்வுக்கு இதம்தருகின்ற நல்ல கவிதைகளைக் கேட்டு எத்தனை நாட்களாகி விட்டன என்றும் பலர் மௌனம் கலைத்து முணுமுணுக்கத் தொடங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

எனவே எமது மரபு வழிவந்த, அதேநேரம் நவீனத்தை அல்லது புதுமையை நோக்கி நகர்கின்ற, காலஓட்டத்திற்கு தாக்குப் பிடிக்கக் கூடிய இயற்கையின் வாழ்வின் யதார்த்தத்தின் தீராத பக்கங்களை, அவற்றின் உண்மைகளை பேசக் கூடிய கவிதைகளை இனங்காண வேண்டியது அவசியமாகிறது.

Leave a Reply