வீசுகிற காற்றைப்போல் வெளியில் நடக்கின்றேன்.
தகிக்கும் வெயிலில் பொசுங்கி
தளர்ந்துகாய்ந்த
புல்போலக் காலைவரை
ஒடுங்கிக் கிடந்தவன்தான்!
துயரமெனுந் தடியால் தொடர்ந்து
விளையாட்டாய்
காலமெனும் சிறுவன் தட்டிக்கொண் டிருக்க
பயணந் தொடர முடியாப் பசியோடு
சுருண்டு
துன்பத்தை தொடர்ந்து சகித்திருக்கும்
அட்டையொன்றைப் போல
அயலினது நையாண்டி
வார்த்தைகளின் துன்பத்தைச்
சகித்துக் கிடந்தவன்தான்.
எதுவும் முயலாது
முயலவும் விரும்பாது
ஏதோஒரு ‘தாமசத்தில்’
அடுபபடியின் சூட்டினிலே
இடைக்கிடை சோம்பல் முறித்து எழுந்து மீளப்
படுக்கின்ற பூனையெனப்
பொறுப்பற் றிருந்தவன்நான்.
உனது ஒருசொல் சுள்ளென்ற ஒளிக்கீற்றாய்
உனது ஒருசொல்
துயில்கலைத்து எழும்பவைக்கும்
ஒழுக்கு மழைத்துளியாய்
என்னை உசுப்பிற்று.
வழிதெருவைக் காட்டிற்று.
மனதுக்கு உரமிட்டு
விழிகள் திறக்கவைத்து
உற்சாகப் படுத்திற்று.
வீசுகிற காற்றைப்போல் வெளியில் நடக்கின்றேன்
போகுமிடம் தெரிகிறது…
புயலாய் இனிப்போவேன்