த.ஜெயசீலன்
1. கவிதைத் துறையில் உங்கள் பிரவேசம் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?
1992 இல் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர் மன்றத்தின் நிகழ்வுக்காக கவிதை எழுதினேன். பின் தமிழாசான் கவிஞர் ச.பே.சஞ்சாட்சரத்தின் ஊக்குவிப்பால் கவியரங்குகளில் பங்கு கொண்டேன். இதனைத் தொடர்ந்து அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர் இ.ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்தில் நல்லூர் கம்பன்விழா கவியரங்கில் 1993ஆம் ஆண்டு பங்குபற்றினேன். அக்காலத்தில் கம்பன்விழா கவியரங்குகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து கவிஞர் இ.முருகையன் அவர்களின் வீடு தேடிச்சென்று அவரின் அணுக்கத் தொண்டனாகி கவிதை யாப்பின் நுட்பங்களைக் கற்றறிந்தேன். சாளரம் சஞ்சிகை என் கவிதை ஒன்றை முதலில் பிரசுரித்தது. வலிகாமம் இடம்பெயர்வைத் தொடர்ந்து மீள் குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள் சஞ்சிகைகளில் என் கவிதைகள் வெளிவந்தன. இலங்கை வானொலியில் இதய சங்கமம், கவிதைக் கலசம் என்பவற்றில் என் கவிதைகள் வாசிக்கப்பட்டன. இன்றும் பல சஞ்சிகைகள் கவிதை அரங்குகள் ஊடாக என் கவிதைப் பயணம் தொடர்கிறது.
2. எழுத வேண்டும் என்ற ஆக்க எழுச்சியை எவ்வேளைகளில் பெற்றுக் கொள்கிறீர்கள்?
கவிதை எழுதும் மனப்பாங்கு இயல்பாக ஏற்பட்டதே. எனினும் நெஞ்சு கனக்கும் நேரமும், இவற்றைச் சொல்லியே ஆகவேண்டும் எனக் கருதும் போதும், ஒரு தூண்டல், கவிமின்னல், கவிதைக்கான பொறிஃ பளிச்சீடு தோன்றும் போதும் ஆக்க எழுச்சியைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. கவிதை எங்கிருந்து வருகிறது என்பதோ, கவிதை எவ்வாறு தன்னை ஒழுங்கு படுத்தி; எழுதிக்கொள்கிறது என்பதோ, என்னென்ன சொற்களால் தன்னை தெரிந்து எடுக்கிறது என்பதோ, என்னென்ன உத்திகளால் தன்னை முழுமைப் படுத்திக் கொள்கிறது என்பதோ, கவிதையை எழுதத் தொடங்குவதற்கு முதற்கணம் வரை புரியாத புதிராக, ஒரு மாயமாகவே எனக்கு இருந்து வருகிறது. கவிதையை பூரணப்படுத்திய பின் அது பற்றிய ஆச்சரியமும் ஒரு அயர்வும் என்னைச் சூழ்வதை ஒவ்வொரு கவிதைப் பிரசவிப்பின் பின்னும் உணர்கிறேன். கவிதை என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னை எழுதுகிறது என்பது ஒரு வியப்புத்தான்.
3. நல்ல கவிதை ஒன்றை எழுதுவதற்கு கவிதை எழுதவேண்டும் என்ற ஆக்க எழுச்சி மட்டும் போதுமானதெனக் கருதுகிறீர்களா?
ஆக்க எழுச்சி மட்டும் பூரணமானஃ நிறைவான கவிதையை தருமென்றில்லை. கவிதை தொடர்பான தேடல், வாசிப்பு, பார்வை, பயிற்சி, அனுபவம் என்பன கவிதையை செம்மைப்படுத்த, செழுமைப்படுத்த உதவலாம் எனக் கருதுகிறேன்.
4. உங்கள் கவிதைகளில் சொல்வளம் சிறப்பாகக் காணப்படுவதாகச் சொல்வார்கள். எளிமையான கவிநயம் மிக்க பொருத்தமான சொற்களைக் கையாள்வது உங்களுக்கு எப்படிச் சாத்தியமாகின்றது?
இதற்காக விசேட முயற்சிகள் எதையும் நான் எடுத்துக்கொண்டதில்லை. எனினும் புதிய புதிய சொற்களை, சொற்தொடர்களை இலக்கியங்களில் சிலாகிக்கப்படும் முக்கிய வரிகளைஃ அடிகளைக் கேட்கும் தோறும், வாசிக்கும் தோறும் நினைக்கும் தோறும் என் மன ‘வார்த்தை வங்கியில்’ அப்பப்போ வைப்பிலிட்டு களஞ்சியப்படுத்தி வருகின்றேன். வார்த்தை வங்கியில் சொற்சேமிப்பு போதியளவு இருப்பின் சொற்பஞ்சம் கவிதையில் வர வாய்ப்பில்லை. ஆனால் கவிதையை எழுதி முடித்து ‘நகாசு’ வேலை செய்து மினுக்கிச் செம்மைப் படுத்தும்போது வந்த ஒரு சொல் மீண்டும் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உள்ளுணர்வு எப்போதும் என்னுள் அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறது.
5. கவிதைத் துறையில் நீங்கள் இதுவரை சாதித்தவை பற்றிக் குறிப்பிடுங்கள்?
தமிழ் கவிதைப் பாரம்பரியத்தில் கவிதையின் வயது, வரலாறு, ஆழம், வீச்சுப் பரம்பல் என்பவற்றுடன் ஒப்பிடும்போது நான் எதுவும் சாதித்ததாக மனம் ஏற்க மறுக்கிறது. இன்றும் எமது தமிழ் கவிதைப் பாரம்பரியம் எனக்கு மிகமிக வியப்பையும் வற்றாத ஆச்சரியத்தையும் தீராத மலைப்பையும் தருவதாகவும் மீண்டும் மீண்டும் புதுமைகளை நோக்கி என்னை உந்தித் தள்ளுவனவாகவும் ஒன்றில் இருந்து ஒன்றாகப் பெருகும் இடையறாத தொடர்ச்சியை பேணுவதற்குரிய வெற்றிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் இருக்கிறது. இந்தத் தளத்தில் கடந்த இருபது வருடங்களில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். 2001இல் கனவுகளின் எல்லை, 2004இல் கைகளுக்குள் சிக்காத காற்று என்பன அவையாகும்.
தமிழக எழுத்தாளர் அமரர் சுஜாதாவை பலர் சிலாகிப்பர், சிலர் நிராகரிப்பர் எனினும் அவரின் பாராட்டை அனேகர் பெரிதாகவே கருதுவர். எனது கைகளுக்குள் சிக்காத காற்று 2004இல் வெளிவந்த சிறந்த தொகுப்பு என 26.12.2004 திகதிய ஆனந்தவிகடன் சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004’ இல் சுஜாதா தெரிவு செய்து இருந்தார். மேலும் அண்மைக் காலமாக கொழும்பு கம்பன் விழாக்களில் தமிழ் நாட்டின் பிரபல கவிஞர்களின் தலைமையில் கவியரங்குகளில் பங்குபற்றுவது என்னைப் பட்டைதீட்டியிருக்கிறது. வெளிக்கொணராத பெருந்தொகை கவிதைகள் என்வசமுள்ளன.
6. ‘புதுக்கவிதையாளர்களுக்கு மரபுக் கவிதைகளின் பரிச்சயம் வேண்டும்’ என்று இன்று குறிப்பிடப்படுவது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
இவ்விடயத்தில் என்னை யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் எனக்கு மிக தெளிவான அபிப்பிராயம் உண்டு. கவிதையின் உருவம், வடிவம், உள்ளடக்கம் என்பன பற்றிய அக்கறையும் உண்டு. இதற்கு சற்று விரிவாக பதிலளிக்க விரும்புகிறேன்.
மிகமிக இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட யாப்பு வடிவங்கள் (சிந்துகள், பதினாறு சீர்விருத்தங்கள், கலிவெண்பா, பாவினமான வஞ்சிப்பா போன்றவை) இன்றையகாலத்துக்கு அவசியமற்றிருக்கலாம். எனினும் கவிதையின் அடிப்படையான ஒத்திசைவால் உருவாகும் ஓசைநயம் கவிதையின் உயிராக கவிதையை உயிரோட்டமாக வைத்திருக்கும். இது இல்லாத கவிதைகள் எத்தகைய பெரும் சிந்தனைகளை தத்துவார்த்த நுட்பங்கள் விளக்கங்களை கொண்டிருந்தாலும் அவை அசைவில்லாத, இயக்கமில்லாத, பிறரிடம் தொற்றும் தன்மை கொண்டிராத கவிதைகளாகவே இருக்கும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயம். இதனைத் தான் பாரதி ‘ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பம்’ என்றும் ‘பாட்டைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லை’ என்றும் பாடினான்.
உலகிலுள்ள எந்த மொழியின் எந்தச் சொல்லும், எந்த வார்த்தைகளும் இரு வகையான அசைகளான ‘நேர்’ ‘நிரை’ என்னும் அசைகளில் அடக்கப்படக் கூடியவை என்பது மிக வியப்பானது. இது இசைக்கு 7 ஸ்வரம் போன்றது. இவ் அசைகளிலிருந்து தமிழ்க் கவிதையின் யாப்பு வேர் கொள்கிறது. இது அசை, சீர், அடி மற்றும் தளை என்பனவாக வளர்த்தெடுக்கப் படும்போது மொழியின் ஓசைப்பண்பு ஒரு ஒழுங்குடன் ஒழுக்கத்துக்குள் உட்பட்டு செம்மை படுத்தப்பட்ட (இசையிலிருந்து வேறுபட்ட) ஓசை சிறப்பை தருகிறது.
எனவே மொழியில் இயல்பாக உள்ளடங்கியுள்ள இந்த ஓசைச் சிறப்பு என்பது கவிதையின் தனித்துவத்தை பேணுகின்ற செல்வாக்கு செலுத்துகின்ற முக்கியமான காரணியாகின்றது. ஈழத்தில் இது பேச்சோசையாக பரிணாமம் பெற்றது
கால மாற்றத்திற்கேற்ப புதுமைகளும் சிந்தனைகளும் வெளிப்பாட்டு உத்திகளும் பாடுபொருளும் மாற்றப்பட வேண்டியது அவசியமே. இவ்விடத்தில் எமது பழைய யாப்புக் கவிதைகளின் பாடுபொருள் ஒரு வாய்ப்பாட்டு ரீதியான தேக்கத்துக்கு உள்ளாகி இருந்ததை நான் 100மூ ஆதரிக்கின்றேன். கால மாற்றத்தால் உருவாகும் புதிய பாடு பொருள்களும் உருவகம் இறைச்சிப்பொருள் போன்றவையும் (புதுக் கதைகளில் அதிகம் கையாளப்படுபவை) யாப்புக் கவிதைகளில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுகொள்கிறேன்.
ஆனால் பல வெற்றிகரமான ஆரம்பகாலப் புதுக் கவிதைகள் எளிமையான யாப்பு வடிவங்களான கலிப்பா, அகவல் பாவில் பாடப்பட்டு அவை முறித்து முறித்து எழுதப்பட்டிருக்கின்றன அல்லது வேண்டுமென்றே ஓசை ஒழுங்கு வராதவாறு வலிந்து சொற்கள் புகுத்தப்பட்டனஃ நீக்கப்பட்டன என்பதனை நிரூபிக்க முடியும். எனது அனேகமான கவிதைகள் எளிமையான யாப்புகளிலேயே அமைந்துள்ளன. எனவே, புதுக்கவிதைகள் எழுத மரபுக் கவிதை பரிச்சயம் நிச்சயம் உதவும் என்று நான் நம்புகிறேன். இவ்விடயத்தில் கவிஞர் முருகையன் ‘எனக்கு யாப்பு என்பது கவிதை எழுதுவதை இலகுபடுத்துகிறது’ என்று கூறியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
இன்று மனிதரிடையே தீண்டாமை என்னும் விடயத்தில் கணிசமான மனப்பாங்கு மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதும் எங்கள் தமிழின் தனித்துவமான ஓசை நயம் கொண்ட கவிதைகள் ஏதோ தீண்டத் தகாதவைகள். அவற்றை எழுதினால் அது தீட்டு அல்லது பாவச் செயல் என்பது போன்ற மாயை புதுக் கவிதையாளர்களிடம் மேலோங்கி இருப்பது வேதனைக்குரியது. மீண்டும் கவிஞர் முருகையன் கேட்டது போல ‘நாம் எமது செவிகளை கழற்றி வைத்துவிட்டோமோ’ கவியோசையின் உருசியை மறுப்பதற்கு என்றும் கேட்கத் தோன்றுகிறது.
செவிவழி இலக்கியங்களை நுகரும் காலம் போய் பார்வை வழி, அச்சுவழி நுகர்வுகாலம் இன்று தோன்றியுள்ளது என்றாலும் நாம் கவிதையின் உயிரோட்டமான ஓசையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதைவிட முக்கியமானது காலத்துக்கு காலம் வௌ;வேறு யாப்புகள் செல்வாக்குச் செலுத்தின. பல வழக்கொழிந்தும் போய்விட்டன. எனவே இக்காலத்திற்கேற்ப யாப்பு வடிவை தெரிவுசெய்வது என்பதும் அதனை இடர்பாடின்றிப் பயன்படுத்துவது என்பதும் முயற்சித்தால் இலகுவானதே.
கீற்ஸ், வால்ட், விற்மன் போன்றோர் தங்கள் பாரம்பரிய கவிதைகளில் பல உடைப்புக்களை மீறல்களை செய்து நவீன உத்திகளை புகுத்தியிருந்தாலும் அவர்களின் மொழிக்கே உரிய சில ஒத்திசைவுகளையும் சுலவாரஅ களையும் முற்றாக கைவிட்டதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.இதைவிட கவிதையின் மரபு என்பதை வெறுமனே யாப்பு என்று தவறாக கருதும் மனப்பாங்கு எம் மத்தியில் மட்டும்தான் இருக்கிறது. மரபு என்பது எமது பாரம்பரியம், எமது பழக்க வளக்கம், எமது வாழ்க்கைமுறை என்பவற்றையும் உள்ளடக்கியது என்பதே உண்மை. நான் நினைக்கிறேன் எமது மரபுக் கவிதை பரிச்சயம் மட்டுமே ‘இன்று தேக்கமுற்றுள்ள தாகவும்’ சிலரால் கூறப்படும் நவீன, புதுக் கவிதையை எதிர்காலத்தில் சரியான வழியில் இட்டுச் செல்ல உதவும்.
7. மரபுக் கவிதையில் பாண்டித்தியம் மிக்க இலங்கை கவிஞர்கள் சிலர் சிறந்த புதுக் கவிதையாளர்களாகவும் விளங்கியுள்ளார்கள். அவர்களுள் சிலரின் கவிதை வீச்சுப் பற்றி உங்கள் மதிப்பீடு யாது?
ஈழத்தைப் பொறுத்தவரை த.இராமலிங்கம் மரபுப் பரிச்சயம் உள்ளவர் என்றாலும் சிறந்த முழுமையான புதுகவிதைகளைப் படைத்து வழங்கியுள்ளார். எமது வாழ்வை புதுக்கவிதையாகப் படைத்து வெற்றி கண்ட சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், சிவசேகரம், புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதைகள் தனித்துவம் மிகுந்ததாக விளங்குவதற்கு அவர்களின் மரபுப் பரிச்சயம் பிரதான காரணம் எனக் கருதுகிறேன்.
8. இன்று கவிதைகள் எழுதும் இளம் புதுக் கவிதையாளர்கள் பலர் அர்த்தம் புரியாத பல வார்த்தைகளை அடுக்கி வார்ப்பு ரீதியான (STEREO TYPE) – ஒரே மாதிரியான – கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கண்டனம் முன் வைக்கப்படுகின்றது. இக் கண்டனம் குறித்து உங்கள் கருத்தைக் கூறுவீர்களா?
இது ஒன்றைப் பார்த்து பிரதி பண்ணுவதன் தொடர்ச்சி தான். இங்கும் தமிழ் நாட்டிலும் இந்நிலை காணப்படுகிறது. ஒரு வகைக்கருத்தை, ஒரு ‘இசத்தை’, ஒரு கொள்கையை, கோட்பாட்டை கொண்டவர்கள் தாம் பின்பற்றுவதை அப்படியே பிரதி பண்ணி எழுதி அதுவே தரமானது என்று நிறுவ ஆயிரம் வியாக்கியானங்கள் செய்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு குழுவைஃ வட்டத்தை சேர்ந்தவர்களும் மற்ற குழுக்களின் படைப்பை காரசாரமாக விமர்சிப்பதும் அது படைப்பே அல்ல என நிராகரிப்பதுடன் படைப்பாளியை அவதூறுக்கு உள்ளாக்கி புறக்கணிக்கவும் செய்கிறார்கள். ஒரு வாய்ப்பாட்டை சொல்வதைப்போல் ஒவ்வொரு குழுவினரும் ‘இவர்கள் தான் உலகத்தரமான படைப்பாளிகள்’ என சிலரின் பேர்களையே மீண்டும் மீண்டும் ஒப்பிப்பார்கள்.
இந்த உலகத்தில் எல்லோரும், அதாவது ஓரறிவு சீவன்களில் இருந்து ஆறு அறிவு சீவன்கள் வரை வாழ உரிமையுண்டு, சுதந்திரமும் உண்டு. ஆனால் இலக்கியத் துறையில் முக்கியமாக படைப்பாக்கத் துறையில் தான் ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை மறுதலிப்பதும் அவனை ஏளனமாக பார்ப்பதும் அவனைப் புறக்கணிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது.
எங்கள் மனதுக்கு பிடித்ததை பொய்யாக தவிர்த்துவிட்டு, எங்கள் முற்றத்து மல்லிகையை மறந்துவிட்டு நாகரீகம், நவீனம் என்றும,; தாம் மேதாவிகள் என்பதை அனைவரும் ஏற்கவேண்டும் என்பதற்காகவும் ‘தயாரிக்கப்படும்’ இதுபோன்ற எழுத்துக்களை காலம் கணக்கெடுக்காது என்பது யதார்த்தம்.
இன்று எமது இளைய தலைமுறையின் தேடலும், முயற்சியும் நவீன தொடர்பாடல் பரிச்சயமும் போற்றப் படக்கூடியது. எனினும் அவர்களில் எத்தனைபேர் எமது தமிழ் பாரம்பரியத்தின் கலை வடிவங்களை, தமிழுக்கே தனித்துவமான கலை நுட்பங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! எமது மண்ணிலே கால் பதித்து நின்றுகொண்டு யாரையோ, எங்கோ இருக்கும் எவரையோ பிரதிபண்ண முயன்று அவர்கள் போல் நாமும் வாழ்ந்தால்தான், எழுதினாற்தான் மதிப்பு என நினைத்து அவர்களின் படைப்புகளைப் போல் படைக்க முயல்கிறோம். எமது கண்முன் வந்து விழும் காட்சிகளின் சாட்சிகளாக இன்று எத்தனைபேர் கவிதை படைக்கின்றோம்?
உலகமயமாதல் எல்லோரையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவர முனைகிறது என்பதனை உணர்ந்தும், எம் தனித்துவங்களைக் காக்க மறந்தும், ,எங்களுடைய முகங்களை இழந்தும், யாருடைய முகத்தையோ சூடிக்கொள்வதே சிறப்பானது என்று வாழ்கிறோம்.. நாம்தான் எம் தாய் வடிவற்றவள், அழகற்றவள் , ஏன் ஒன்றுமே இல்லாதவள்,ஆனால், அயல் நாட்டு அண்ணி அழகானவள், எல்லாம் கொண்டவள் என்று பாராட்டுப் பத்திரம் வழங்குகிறோம்..
9. கவிதையில் உங்களை ஈர்ப்புக் கொள்ளச் செய்த கவிஞர் அல்லது கவிஞர்கள் என யார் யாரை குறிப்பிட விரும்புகிறீர்கள்?
இன்றும் எமது முதுசங்களான இலக்கியங்களை கவிதைகளை நான் கற்கிறேன், இரசிக்கிறேன். திருக்குறளின் தொன்மை யாவரும் அறிந்தது. அது பேசிய வாழ்வின் சகல நிலைகளுக்குமான உண்மைகள், கருத்துக்கள், உத்திகள், சொற் சிக்கனம், பொருள் செறிவு என்பன இன்றைய நவீன கவிதைகளில் கூட காணக்கிடைக்காதது. திருவள்ளுவர் தொடக்கம் கம்பர், மாணிக்கவாசகர், அருணகிரி கவிதைகள், சித்தர் பாடல்கள், என் பூட்டன் பாரதியின் கவிதைகள் என்பன எனக்கு வற்றாத வியப்பளிப்பன.
ஈழத்தில் மகாகவி முருகையன், புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், சோ.பத்மநாதன், கல்வயல் குமாரசாமி, முகுந்தன் போன்றோரின் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. நவீன கவிதைகளுக்கு நான் எதிரி அல்ல. தமிழ் நாட்டின் பசுவைய்யா, கலாப்பிரியா, சுகுமாரன், மனுஸ்ய புத்திரன், சல்மா, மாலதி மைத்ரி, அழகிய பெரியவன் போன்றோரும் ஈழத்தில் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி, கருணாகரன், அனார், பா.அகிலன், தி.திருக்குமரன் ஆகியோரும் என்னைக் கவர்ந்தவர்கள்.
10. அவ்வாறு உங்களை ஈர்ப்புக்கொள்ளச்செய்த கவிச் சிறப்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
ஓவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவம் உடையவை. யாருக்கோ பிடித்தது என்பதற்காக அவரை திருப்திப்படுத்த இவற்றை நான் விரும்பியதாக கூறவில்லை. என் நெஞ்சுக்கு நெருக்கமானவை என்பதால் இவை என்னை ஈர்த்துக்கொண்டன.
11. பிரதேச செயலராக விளங்கும் நீங்கள், உங்கள் வேலைப் பழுவுக்கு மத்தியிலும் கவிதைப் படைப்புக்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்கிக் கொள்கிறீர்கள்?
பிரதேச செயலாளர் என்ற பதவி கடமையின் நிமித்தம் நான் ஏற்றுக் கொண்டது. வேலைப்பழு, வாழ்வின் நெருக்கடிகள், முடிவுறாத மக்களின் பிரச்சினைகள், சூழல் அழுத்தங்கள் என்பவற்றின் போதும் எனக்குள் இருக்கும் ‘கவிக்குரல்ஃ கவிஞன்’… தன்னை வெளிப்படுத்தும் நேரமெல்லாமும் நான் அந்தக் ‘கவிக்குரலிடம்ஃ கவிஞனிடம்’ என்னை ஒப்புக் கொடுக்கிறேன்.
இன்றைய வாழ்வியலில் எவருமே ‘முழமையான கவிஞனாக மட்டும்’ வாழ முடியாது. கவிதைக்கான சூழல் இல்லாதபோது தோன்றும் சில கவிதைக்கான பொறிகளை/மின்னல்களை/ பளிச்சீடுகளை சுருக்கமாக எழுதிவைத்து சாவகாசமாக அவற்றுக்கு உருக்கொடுப்பது பெரிய விடயம் இல்லை. சில பளிச்சீடுகள் உரிய நேரமின்மையால் கருச்சிதைவானதுமுண்டு. எனக்குள் இருக்கும் கவிஞனை சாகவிடாமல் போஷிப்பதற்கு நல்ல வாசிப்புத் தீனி போடுவது தான் இன்று பெருஞ் சவாலாக விளங்குகிறது.
12. நீங்கள் சாதிக்க விரும்புவது பற்றி அல்லது உங்கள் இலட்சியம் பற்றிக் கூறுங்கள்.
முதலில் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்பது என் அவா. மனிதாபிமானமுள்ள மனிதனாக என்னை மாற்ற எனக்குக் கிடைத்த மகத்தான கருவி கவிதை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நான் இன்றும் முழுமையான மனிதனாக மாற முயன்றுகொண்டிருக்கின்றேன். இதனைக் கடந்து மனிதர்களுக்கு வழிகாட்டும், மனிதத்தை வாழ வைக்கும், மானிடத்துக்கு ஈடேற்றம் வழங்கும், மனுக்குலத்திற்கே நீதிநெறிகாட்டும் ஒரு கவிஞனாக மாறுவது என்பது என் ஈடேறாத பெருங்கனவாக நீள்கிறது. அந்தக் கனவை நனவாக்க முடியுமா என்ற இடையறாத கேள்விகள் தான் என் கவிப் பயணத்துக்கான எரிபொருளாக அமைகின்றன. இயற்கையும்; இறைநினைவும் என்னை வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இப்பேட்டி சித்திரை மாதம் 2012 ஜீவநதி (யாழ்) இதழில் வெளியாகியிருக்கிறது.