ஆசிரியர் அம்பலம்
“காணவும் பேணவும் நமக்கென இருப்பன சிலவே, மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்போம். என்ற மகுடத்தில் தங்கள் ‘அம்பலம்’ இதழ் – 6 வெளிவந்திருப்பதைப் பார்த்தேன். வெறுமனே விளக்குகள் கட்டடங்கள் தூண்களும், சிற்பங்களும், வாகனங்களும், தளபாடங்களும், மட்டும் தான் எமது மரபுரிமை சொத்துக்களா? இப்பொருட்களின் நிமித்தம் தங்களுக்கு ஏற்பட்ட இந்த விழிப்புணர்வு ஏன் எங்கள் ஏனைய மரபுரிமைச் சொத்துக்களில் இல்லாமல் போய்விட்டது? எங்களுக்கு அதாவது தமிழர்களுக்கு என்று மரபுரிமையான, நீண்ட வரலாறு கொண்ட, ஆழ்ந்த அகன்ற, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நாட்டுப்புறக் கலைகள், பண்ணிசை, கவிதை, ஓவியம், நாட்டியம், நாடகம், என்பன காணப்படுகின்றனவே? வெறுமனே நவீனம் என்ற போர்வையில் எந்தவித அர்த்தமுமற்று எமது பாரம்பரியமான இக்கலைவடிவங்களைப் புறக்கணித்து, நீண்டத்தகாது என்று ஒதுக்கி, வேண்டுமென்றே விலக்கி விமர்சிக்கும் மனப்பாங்கும் எமது மரபுரிமையை அழியவிடும் கைங்கர்யம்தானே?
உ–ம் எமது கவிதை மரபு சுமார் 2000 ஆண்டு பாரம்பரியம் உடையது. சங்கப் பாடல் கலித்தொகை, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், இன்னும் பல என இவற்றில் சொல்லப்படாத எடுத்தாழப்படாத எமது மரபுரிமைக்குச் சான்றான விடயங்கள் எண்ணற்றவை இருப்பதைக் கூறலாம். இந்த விடயங்களை, இந்த வடிவங்களை, முற்றாய்ப் புறக்கணித்து எமது வாழ்வியலுக்கு ஒவ்வாத எங்கெங்கோ மேலைநாடுகளில் அவரவர்களின் கலாச்சார அடையாளங்களாகத் திகழ்ந்த கலைக்கான கவிதைக்கான விடயங்களையும், வடிவங்களையும் தலைமேல் வைத்துக் கொண்டாடி வருகிற தாங்கள்… அவற்றுக்கே முக்கியத்துவமும் கொடுத்து வருகின்ற தாங்கள்… எமது மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்க கங்கணங்கட்டுவது வேடிக்கையானது. தங்கள் இதழில் வெளிவந்த கவிஞர் முருகையன் தொடர்பான “வாயடைத்துப்போனோம்” கட்டுரையில் முருகையன் கூறுவதாக எடுத்துக்காட்டும் விடயம் தமிழகத்தில் புதுக்கவிதை இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் மேற்கினது தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் ஈழத்தில் நேரடியாக அந்தத் தன்மை உருவாகவில்லை என்பதாகும். இக்கூற்று மிகச் சரியானதே என்பது என் அபிப்பிராயம் எனினும் நவீன விடயங்கள் மேற்கின் கலாச்சார வடிவங்கள் எமது கலைகளில் தேவையில்லை என நான் கூற வரவில்லை. அவை தாராளமாகச் சேர்க்கப்படலாம். உள்வாங்கப்படலாம். எனினும் அதற்காக எமது மரபுரிமை சொத்துக்களை முற்றுமுழுதாகப் புறக்கணித்து மட்டந்தட்டி அல்லது தீண்டத்தகாதவையாக பார்த்து ஒதுக்குகிற நிலையை, தமிழகத்தில் இன்றும் சிலரால் தொடரப்படுகிற இவ்வாறான போக்குகளை அப்படியே அப்பட்டமாக பிரதிபண்ணி நாம் தமிழ் நாட்டவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என நினைக்க அல்லது எழுத வேண்டும் தானா என்ற விடயத்தை இத்தருணத்திலேனும் நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தங்கள் சகோதர இதழாய் வெளிவரும் கடைசி இரண்டு ‘மறுபாதி’ இதழ்களிலும் திரு.ஜெயசங்கர், திரு.கருணாகரன் ஆகியோரின் கட்டுரைகள் எமது கவிதை தொடர்பான மீள் பரிசீலனைக்கு நல்ல தொடக்கப்புள்ளிகளாக அமைந்துள்ளன எனக் கருதுகிறேன்.
இங்கு கவிதையை உதாரணமாக மட்டும் கொண்டேன். இதுவே ஏனைய எமது சகல கலைகளுக்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன். தற்போதைய நவீன கவிதைப்போக்காக பலரால் தவறாகக் கருதப்படும் பாலுணர்வு, பெண்பாலுணர்வு தொடர்பான விடயங்களை பேசல், ஆண்குறி, பெண்குறி, என்பன பற்றியே இங்கும் எழுதல் என்பன எவரையோ பிரதிபண்ணும் முயற்சிதானே? (சிலுவை- 04 பா.அகிலன்) மேற்கிலும் தமிழகத்திலும் இதற்கான தேவை இருக்கலாம். இங்கு இவ்விடயத்தை விட எத்தனையோ எரியும் பிரச்சனைகள் எடுத்தாழப்படாத போதும் குறிகளோடு புழங்குவது நாம் இன்னும் மண்ணில் மிதிக்காமல் இருப்பதையே காட்டுகிறது.
எனவே “மரபுரிமையைக் காப்போம்” என வீறு கொள்ளும் தாங்கள் வெறும் சடப்பொருட்களில் மட்டும் மரபுரிமையைக் காக்காமல் இன்றும் உயிர் துடித்தொளிர்ந்து கொண்டிருக்கும் எமது மரபுரிமைக் கலைகளிலும் அக்கறை கொள்ள வேண்டுமென பணிவோடு வேண்டுகிறேன்.
நன்றி.
அருணன் (த.ஜெயசீலன்)