சோ.ப: பல்பரிமாண ஆளுமை

ஈழத்தின் தலைசிறந்த மூத்த கவிஞர்களில், அறிஞர்களில் முக்கியமான ஒருவரான சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப) அவர்களின் பல்பரிமாணத் தன்மை பெரும் வியப்பிற்குரியது. மிகச்சிறந்த கவிஞராகவும், சிறந்த கவியரங்கக் கவிஞராகவும், மரபிலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுடையவராகவும், நவீன, மேலைத்தேய இலக்கியங்களிலும் ஆளுமை மிக்கவராகவும்;, மிகச்சிறந்த ஆங்கிலப் புலமையாளராகவும், பெருமைமிகு ஆசானாகவும், சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், உயர்ந்த பேச்சாளராகவும், நல்ல நாடக ஆசிரியராகவும் நடிகராகவும்;, தேர்ந்த விமர்சகராகவும், நீண்ட காலமாக சமூகப்பணிகளில் இடையறாது ஈடுபடுபவராகவும் சோ.ப அவர்கள் விளங்குகிறார்.

தனது கல்விப் புலம் சார்ந்து யாழ் இந்துக் கல்லூரி, பேராதனை, யாழ்ப்பாண பல்கலைக் கழகங்களில் பயின்று பிரிட்டிஷ் கவுன்சில் புலமைப் பரிசு பெற்று இங்கிலாந்து ‘றெடிங் பல்கலைக் கழகத்தில்’ ஆங்கிலத்துறையில் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டவர். சுமார் இருபது வருட காலம் ஆசிரியராகவும் பின் 1983 ல் இருந்து பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராகவும் ஈற்றில் மூன்று ஆண்டுகள் அதே பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அதிபராகவும் பணிபுரிந்து இளைப்பாறியவர்.

60 களில் ஈழத்தமிழ்க் கவிதைத் துறையில் காலடி எடுத்து வைத்த சோ.ப அவர்கள் இன்றுவரை கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர். “எனது துறை கவிதை என்பது ‘எப்பவோ முடிந்த காரியம்’. விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம் , மேடைப் பேச்சு, என்று பல ஈடுபாடுகள் எனக்கிருந்தாலும் என் ஆத்மாவை நான் எழுதும் கவிதையே காட்டும் என்று நம்புகிறேன்” என்பது சோ.ப வின் பிரகடனம்.

ஈழத்து மரபுக் கவிதையில் தொடர்ந்து வந்த பாரம்பரியத்தில் இன்னு(று)ம் செயற்படும் மூத்த கவிஞராக விளங்கும் சோ.ப வசனக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு போன்றவற்றிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் மரபுக்கவிதையை ஆழ்ந்து அகன்று நுணுகி உணர்ந்து கற்று, அதன் திட்ப நுட்பங்கள் தேர்ந்து, எழுத்தின் மாத்திரை அளவு கூட ஓசை நெருடல் இல்லாத கேட்கும் செவிகளை ஊறு செய்யாத ஆற்றோட்டமான கவிதைகளை அநாயாசமாகப் படைக்கும் திறனுடன் அவற்றைச் சபைகளில் கேட்போர் கிறுகிறுத்துப் போகும் வகையில் எடுத்துரைக்கும் தனித்துவ பாங்கும் சோ.பவின் பெருமைகள்.

சந்தக் கவிதைகளைப் படைப்பதில் பெரும் நாட்டம் கொண்ட சோ.ப அருணகிரியாரின் பல திருப்புகழ் சந்தங்களில் பிசிறில்லாமல், தளை தட்டாமல், ஓசை விகற்பங்கள் இல்லாமல் பல சமகாலக் கவிதைகளை படைத்திருக்கிறார். இதை விட தமிழில் புழக்கத்தில் உள்ள எல்லா யாப்புக்களிலும் தான் சொல்ல வந்த விடயத்தை எந்த வித இடையுஸ்ரீறுகளும் இன்றி கவித்துவம் குன்றாமல் படைத்தளிக்கும் இயல்பான கவியாற்றல் மிகுந்தவராகவும் விளங்குகிறார்.

இவரின் ஆழ்ந்த மரபுப் புலமைக்கு இவர் பழந் தமிழ்க் காப்பியங்கள் இலக்கியங்களிலும், நாட்டார் இலக்கியங்களிலும், சைவ சமய இலக்கியங்களிலும் பெற்றிருக்கும் ஆட்சியும் அனுபவமும் பயிற்சியும் காரணம் எனலாம். சைவ சமய இலக்கியங்களான தேவார திருவாசகங்கள், இதிகாச புராணங்கள் போன்றவை இவருக்கு வாலாயமானவை. கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்களில் இவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. அதே போல நவீன இலக்கியங்களையும் புறக்கணிக்காமல் அவற்றின் புதுமைகளை உள்வாங்க இவரின் பிறமொழி இலக்கிய பரீச்சயமும், அவை தொடர்பான தேடலும், மொழி பெயர்ப்பில் கொண்டிருக்கும் ஆர்வமும் உதவின எனலாம்.
இவரின் கவிதைகள் மண்ணின் வாசத்தை சுமந்து நிற்பவை. எமது தொன்மங்களில் தோய்ந்து எழுந்தவை. ஊணர்வுபுஸ்ரீர்வமானவை. எமது வாழ்க்கை முறைமைகளைப் பேசுபவை. எங்கோ அந்தரத்தில் தொங்கி ஆகாயத்தில் மிதந்து , நிலத்தில் கால் பதித்து நில்லாது, யாரோ சிலரின் விமர்சனத்துக்காக எவரோ சிலரைத் திருப்பிப்படுத்த எழுதப்படுபவை அல்ல அவை.

தமிழ் மரபுக் கவிதையின் இடையறாத தொடர்ச்சியாக ஈழத்தமிழ்க் கவிதையின் தனித்துவ அடையாளங்களான பேச்சோசை பண்பு, கிராமிய சொல்லாட்சி, சோடனைகளுக்கு முக்கியத்துவம் கொடாத யதார்த்த நோக்கு, போன்ற பல இயல்புகளை உள்வாங்கி அவற்றை மேலும் மெருகேற்றிச் செல்லும் அதே நேரம் அன்றாட வாழ்க்கையின் இன்னோரன்ன விடயங்களைப் பாடுபொருளாக கொண்டவையாகவும் காலத்தை பிரதிபலிப்பவையாகவும் நவீனத்தை புறக்கணிக்காத சமரசத்தடன் முன்செல்பவையாகவும் சோ.ப வின் கவிதைகள் விளங்குகின்றன.
பல நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் பங்குபற்றியும் தலைமை தாங்கியும் ஈழத்துக் கவியரங்க மரபு வழக்கொழிந்து, முகமிழந்து போகவில்லை என்பதை இன்னு(று)ம் நிரூபித்துக் காட்டுவது சோ.பவின் இன்னுமொரு சிறப்பம்சம். குறிpப்பாக ஈழத்தின் கம்பன் விழா கவியரங்குகளில் சோ.ப வின் பங்களிப்பு கணிசமானது.
தனித்துவமான பாணியில் கவிதைகளை மேடையில் செவி கிறங்க எடுத்துரைக்கும் இவரின் கவியரங்குகளைக் கேட்க என்று தனியான இரசிகர் கூட்டம் ஒன்று இன்றும் உள்ளது. கவிஞருடன் இணைந்தும் கவிஞரின் தலைமையிலும் பல கவியரங்குகளில் 1994 ல் இருந்து பங்குபற்றக் கிடைத்தது பெரும் பேறு என்றால் மிகையில்லை. அவரின் அடிதொடரும் இளந்தலைமுறையில் நானும் ஒருவன் என்பது எனது பெருமைகளில் முக்கியமானது.

நீண்ட காலம் கவிதைத் துறையில் ஈடுபட்டும் கவியரங்ககளில் பங்குபற்றியும் வந்த போதும் சுமார் நாற்பது வருடங்களின் பின் 90 களின் இறுதிப் பகுதியிலேயே சோ.பவின் கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின. இவரின் முதற் கவிதைத் தொகுதி ‘வடக்கிருத்தல்’ 1998ல் வெளிவந்தது. தொடர்ந்து ‘ஆபிரிக்கக் கவிதைகள்’, ‘தென்னிலங்கைக் கவிதைகள்’, ‘நினைவுச் சுவடுகள்’, ‘சுவட்டெச்சம்’,‘பர்மிய பிக்கு சொன்ன கதைகள்’, ‘தென்னாசியக் கவிதைகள்’, ஆகிய பல நூல்கள் வெளிவந்துள்ளன.

‘வடக்கிருத்தல்’ சோ.ப வின் பிரபலமான பல மரபுக்கவிதைகளை கொண்டது. எனினும் பின் நாட்களில் வெளிவந்த ‘நினைவுச்சுவடுகள்’, ‘சுவட்டெச்சம்’ என்பன யாப்புக் கவிதைகளை தவிர்த்து அதிகம் பேச்சோசை சார்ந்த வசன கவிதைகளைக் கொண்டு வெளிவந்துள்ளன.

ஈழத்தின் நாடக மேதை குழந்தை ம.சண்முகலிங்கத்தின் சில நாடகங்கள் சோ.பவினால் ஆங்கிலத்தில் ‘Shanmugalingam: plays’ என்று மொழி பெயர்க்கப்பட்டு நூலுருப் பெற்றுள்ளது. ஈழத்தின் இன்றைய பல கவிஞர்களுடைய கவிதைகள் சோ.பவினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ‘Srilankan Tamil Poetry’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது. ‘ Tamil short stories from Srilanka’ என்ற நூலும் அவரின் இன்னொரு மொழிபெயர்ப்புப் படைப்பாகும்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரு கவிதைத் தொகுதிகளும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஒரு நெடும்பாவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘சைபீரிய றயில் வண்டி உரையும் ஃபிரான்ஸைச் சேர்ந்த குட்டி ஜேனும்’ என்ற இந்த நெடும்பா கலாநிதி ஜெராட் றொபுஷோனுடன் இணைந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2013ல் வெளியிடப்பட்டது. இவற்றில் ‘ஆபிரிக்கக் கவிதைகள்’, ‘தென்னாசியக் கவிதைகள் ;, ‘பர்மியப் பிக்கு சொன்ன கதைகள்’, ஆகிய நூல்கள் சாகித்ய விருதுகளைப் பெற்றிருப்பது நோக்கற்பாலது.

இவரது பல மொழி பெயர்ப்புக் கவிதைகள் Journal of south Asian literature ,Michigan 1987 இலும் Penguin new writing in Sri lanka 1992 இலும் வெளிவந்துள்ளன. ‘தென்னிலங்கைக் கவிதை” தொகுதியில் உள்ள சிங்களக் கவிதைகள் ஆங்கில மொழியுஸ்ரீடாக தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கவிஞரின் சிங்கள மொழிப் புலமையும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

“சோ.ப அவர்கள் மூலக் கவிதைகளின் மணங்குணங்களிற் பெரும் பகுதியைச் சிந்தாமற் சிதறாமல் ‘பேணமாக’ எடுத்து வர வேண்டும் என்று கருதும் ஒருவர். மொழி பெயர்ப்புகள் மூலங்களின் நிழல்களாக மாத்திரம் நின்று விடுவது போதாது என்று கருதுகிறவர். அதே வேளை அவரும் ஒரு கவிஞர் என்ற வகையிலே கலைப்படைப்பாக்கங்களின் நெளிவு சுளிவுகளையும் உணர்ந்தவர். ஆகவே தாம் மேற்கொண்ட பணியினை மிகுந்த பொறுப்புணர்வுடனும் விசுவாசத்துடனும் ஆற்றியுள்ளார்.” ஏன்றும் “சோ.ப அவர்கள் தாம் செய்துள்ள மொழிபெயர்ப்புக்களிற் சிலவற்றில் தமிழ் யாப்பிற்கு அமைவான செய்யுள்களையும் கையாண்டுள்ளார். இவை நன்றாகவே உள்ளன. தம் தொடக்க கால மொழிபெயர்ப்புகளில் அவர் இந்த நிலைப்பாட்டினை மேற்கொண்டார் என்று தோன்றுகிறது. ஆனால் காலப் போக்கிலே தமிழ் யாப்பு முறைக்கு அமைவான வடிவங்களையிட்டு அதிகம் கவலைப்படாமல் தாராளமான சுயாதீனத்துடன் ஓசை அமைப்பினைக் கையாண்டுள்ளார்” என்றும் கவிஞர் முருகையன் அவர்கள் சோ.ப வின் ‘ஆபிரிக்கக் கவிதை’ நூலுக்கான முன்னுரையில் இவரின் மொழிபெயர்ப்பின் தனித்துவத்தை சிலாகித்திருக்கிறார்.

இதைவிடக் கவிஞரின் இசைப் பாடல்கள் பல மிகப் பிரபலமானவை. இவரினால் இயற்றப்பட்ட இசைப்பாடல்கள் கொண்ட மூன்று இறுவெட்டுக்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘நல்லூர் முருகன் காவடிச் சிந்துகள்’ (1986), ‘முத்துச் சிரிப்பு’(2006) ஆகிய இரு இறுவெட்டுக்களும் இன்னிசை வேந்தன் பொன். சுந்தரலிங்கத்தின் குரலில் வெளிவந்து பிரபலம் பெற்றவை. ‘என் நெஞ்சு நீ உலவும் புஸ்ரீங்காவனம்’ என்ற இறுவெட்டு பவனுஜாவின் குரலில் வெளிவந்தது. கவிஞரின் தனிப்பாடல்கள் சிலவும் முக்கியமானவை. யாழ் மாவட்ட கீதம், அண்மையில் வெளி வந்த யாழ்ப்பாண பிரதேச கீதம் என்;பன அவற்றி;ல் முதன்மையானவை.

சோ.ப அவர்களின் பேச்சைக் கேட்கவென்று ஒரு கூட்டம் காத்துக் கிடப்பதை கண்டிருக்கிறோம். இக் கூட்டத்தில் பேரறிஞர்களில் இருந்து பாமரரும் அடங்கி இருப்பர். அதிகம் அலட்டிக் கொள்ளாத, ஆர்ப்பாட்டமில்லாத, ஆறுதலான, ஆழ்ந்த விடயங்களை அனாயசமாக அளாவிச் செல்கின்ற, சீரான தெளிந்த தீர்க்கமான பேச்சுப் பாணி அவருடையது. மரபிலக்கிய பரீச்சயம், கவிதைகள் பாடல்களை மனப்பாடமாக வைத்திருந்து ஒப்பிக்கும் ஆற்றல், தத்துவார்த்தப் பார்வை, மேற்கத்திய இலக்கியத் தேடல் என்பவற்றின் அடிப்படையில் சோ.ப வின் ஒப்பீட்டுப் பேருரைகள், கவிதை, இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் கேட்க கேட்க திகட்டாதவைகளாக அமைவதை சகலரும் ஏற்றுக் கொள்வார்கள்.

சோ.ப அவர்கள் தேர்ந்த ஒரு விமர்சகர். ஆனால் யாந்திரீகத்தனமான சராசரி விமர்சகர் அல்ல அவர். தன்னை மேதாவியாய்ப் பாவித்து தனக்கே எல்லாம் தெரியும் என்ற ரீதியில் பிறரில் பிழை பிடிப்பதையே வழமையாக கொள்ளாத, மற்றவரை அவர்களின் படைப்பை மட்டந்தட்ட நினைக்காத, தட்டிக் கொடுக்கின்ற, வளரும் பயிர்களின் முளை முறிக்காத, தவறுகளை பிழைகளை நாசூக்காக அவர்களின் மனம் கோணாதவாறு அவர்கள் புண்படாத விதமாக சுட்டிக்காட்டுகின்ற, “இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்”; என்று வழிப்படுத்துகின்ற விமர்சகர் அவர்.

சோ.ப அவர்கள் நாடகத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவர் சில நாடகங்களில் பாத்திரமேற்று நடித்திருப்பதை கண்டிருக்கிறோம். ஈழத்தில் கம்பன் விழாக்களில் ‘இன்று சந்திக்கும் இவர்கள்’ நிகழ்வுகளில் தன் நடிப்பாற்றலை பல தரம் இவர் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்.

இசைத்துறையிலும் மிகுந்த ஞானமும் ஈடுபாடும் உடைய கவிஞர் அவர்கள் நீண்ட காலமாக நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தை நெறிப்படுத்தி நிர்வகித்து இசை விழாக்களை ஒழுங்கு செய்து வருவதும் இசை வகுப்புகளை நடாத்தி இளைய கலைஞர்களை வளர்த்து வழிப்படுத்தி வாய்ப்பளித்து வருவதும் போற்றுதற்குரியது.

சோ.ப அவர்களின் ஆங்கில அறிவு ஆழ்ந்து அகன்றது. அதனை அவர் கற்பிக்கும் பாங்கும் சிறப்பானது தனித்துவம் மிக்கது. அவரிடம் உயர் நிலை ஆங்கிலம் பயின்ற பலர் அவரின் ஆசிரியத்தவத்தின் சிறப்புகளைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

இன்றும் பல்வேறு நாடுகளில் கவிதை தொடர்பான ஆய்வரங்குகளில் பங்குபற்றுவதற்குரிய கவிப்புலமையும் மொழிப்புலமையும் மிக்கவராக திகழ்வதும் சோ.பவின் இன்னொரு பரிமாணமாகும். கவிஞர் அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, சார்க் இலக்கிய விழா, ஜெர்மன் கலாசார மையம் நடத்தும் விழா, விஜயவாடா உலக கவிதைத் திருவிழா, நாலாவது ஐரோப்பிய தமிழராட்சி மாநாடு போன்றவற்றில் பங்குபற்றியிருப்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பது.

இதில் 2010ல் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் “ஐசக் தம்பையா செய்த தாயுமானவர் மொழிபெயர்ப்பு” என்ற மகுடத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்ததும், சார்க் இலக்கியத் திருவிழாக்களில் 2013 தொடக்கம் 2019 ஆம் ஆண்டுகளிற்கிடையில் நான்கு தடவை கலந்து கொண்டதும், 2017 ஆம் ஆண்டு Goethe institute என்ற ஜெர்மன் கலாசார மையத்தின் ‘கவிஞர்களை மொழிபெயர்க்கும் கவிஞர் (poets translating poets) என்ற திட்டத்தில் கலந்து கொண்ட தெற்காசியாவைச் சேர்ந்த 54 பேரில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒரே தமிழ்க் கவிஞராக விளங்கியதும், விஜயவாடாவில் நடந்த ‘அமராவதி கவிதைத் திருவிழாவில்’ 2017, 2018, 2019 ம் ஆண்டுகளில் மூன்று முறை பங்குபற்றியதும், பிரான்ஸ் நாட்டின் பரிசில் 2019 ல் நடந்த நாலாவது ஐரோப்பிய தமிழாராட்சி மாநாட்டில் கலந்து கொண்டதும் என ஈழத்துக் கவிதைகளை அவற்றின் பெருமைகளை உலகெங்கும் பரப்புகின்ற அதே வேளை பிற நாடுகளின் கவிதைகள் அவற்றின் பண்புகளை ஆங்கில வழியில் எம்பார்வைக்குக் கிடைக்கச் செய்கின்ற ‘பண்பாட்டுத் தூதராகவும்’ சோ.ப செயற்பட்டிருகின்றார்.

தொடர்ச்சியான கல்விப்பணி, இடையறாத கலைப்பணி என்பவற்றைத் தாண்டி இன்றுவரை தொடர்ச்சியான சமூகப்பணிகளை இவர் ஆற்றி வருவது வியப்புக்குரியது. மூன்று சிறுவர் இல்லங்களை நிர்வகிக்கும் ‘சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தில்’ இருபத்து நான்கு வருடங்கள் இயங்கி அதன் தலைவராக நீண்ட காலமாகச் செயற்படும் சோ.ப அவர்கள் செய்யும் பணிகள் தெய்வப்பணிகள் என்றால் மிகையல்ல.

இளைய தலைமுறையினரை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த இவர் என்றும் பின் நின்றதில்லை. வயது கடந்து எல்லாத் தலைமுறையினருடனும் இயல்பாக நட்பாக பழகும் பண்புடையவர் இவர் யாழில் நடைபெற்ற பண்டிதர் வகுப்புகளில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க ஆசானாக விளங்கி பல இளையவர்களை தமிழின் பாலும் மரபு இலக்கியங்களின் பாலும் கவிதையின் பாலும் ஈர்க்க வைத்த பெருமையும் இவரைச் சாரும். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய மரபுக்கவிதை பயிலரங்கின் பிரதான வளவாளராக கவிஞர் விளங்கியதும் அவருடன் இணைந்து பயிலரங்கை நடத்த எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் மறக்க முடியாத தருணங்கள். அதே போல எனது நான்கு கவிதை நூல் வெளியீடுகளிலும் கவிஞர் கலந்து கொண்டு ஆய்வுரைகளை ஆற்றியமையும் எனக்குக் கிடைத்த பேறு.

அண்மையில் ‘டான்’; தொலைக்காட்சியில் கவிஞர் அவர்களும் பேராசிரியர் சிவலிங்கராஜாவும் இணைந்து தொடராக நடத்திய ‘கவிதைகள் சொல்லவா” எனும் நிகழ்ச்சி பெரு வரவேற்பைப் பெற்றதோடல்லாமல் இவரின் ஆழ்ந்த புலமையையும் எடுத்தியம்பியது.

சோ.ப வின் தமிழ், இலக்கிய மற்றும் சமயப் பணிகளை கௌரவிக்கும் முகமாக பல விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன. கலாபுஸ்ரீசணம்(2010), வடமாகாண ஆளுனர் விருது (2007), நூல்களுக்கான மாகாண மட்ட விருதுகள், மூன்று சாகித்திய விருதுகள், யாழ் மாநகர சபையின் ‘யாழ் விருது’ (2020), தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்த்தானத்தின் ‘சிவத்தமிழ் விருது’(2020) என்பன இவ்வாறு வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.

இவரின் பவள விழா 2014 ல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட போது சோ.ப அவர்களின் அருமை பெருமைகளைப் பறை சாற்றும், அவரின் முக்கியத்தவத்தை உலகுக்கு உணர்த்தும், ‘சோ.ப 75 Sopa –Felicitation Number’’ என்ற வரலாற்றுப் பெட்டகமான நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரபறிஞர்களாலும் நவீன இலக்கியவாதிகளாலும் சமகாலத்தில் ஒரே விதத்தில் மதித்துப் போற்றப்படும் சோ.ப அவர்கள் இன்றும் தோற்றத்தில் முதுமையோடும் எண்ணத்தில் இளமையோடும் இலக்கிய பணிகள், இலக்கிய கூட்டங்கள், கவியரங்குகள், சொற்பொழிவுகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள், சமூகப் பணிகள் என்று ஓயாமல் தன் உந்துருளியில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

எம் ஈழத்தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற பொக்கிஷமான, பல் பரிமாணம் மிக்க ஆளுமையான, கவிஞர் சோ.ப அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் மேலும் எம் மண்ணுக்கும் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அரும்பணிகளை ஆற்ற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பணிகிறேன்.

13.12.2021